சென்னை: வரும் உள்ளாட்சித் தேர்தல், லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் மனிதநேய மக்கள் கட்சி (ம.ம.க.) தனது சொந்த சின்னத்தில் மட்டுமே போட்டியிடும் என்ற முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த முடிவு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற ம.ம.க., ‘உதயசூரியன்’ சின்னத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. அதேபோல் வி.சி.க. மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றன. ஆனால் ம.ம.க. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்தும் அமைச்சரவையில் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், ம.ம.க. மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், “இனிமேல் எந்தத் தேர்தலிலும் மற்ற கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடாமல், மனிதநேய மக்கள் கட்சியின் சொந்த சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம்” என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: ஒரு விசில் சப்தத்திற்கே ஆடிப்போயிட்டீங்களே! இதுதான் திராவிட மாடலா? தமிழக பாஜக கிண்டல்!

கூட்டத்தில் பேசிய ஜவாஹிருல்லா, கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கும், தனித்த அடையாளத்துக்கும் இந்த முடிவு முக்கியமானது என வலியுறுத்தினார். தனிச் சின்னத்தில் போட்டியிடுவது மூலம் கட்சியின் வாக்கு வங்கியை வலுப்படுத்தவும், தேர்தல் அரசியலில் சுயமரியாதையுடன் செயல்படவும் இந்த தீர்மானம் உதவும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவு தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான உறவுகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலில் ம.ம.க.வுக்கு கிடைத்த ஒரு இடம் மற்றும் த.வெ.க. அரசுக்கு வழங்கிய ஆதரவு ஆகியவை இந்த முடிவுக்கு பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ம.ம.க.வின் இந்த அறிவிப்பு வரும் உள்ளாட்சித் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் சிறுபான்மை வாக்குகளை நம்பியிருக்கும் கட்சிகளின் எதிர்கால உத்திகள் குறித்தும் இந்த முடிவு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: செந்தில்பாலாஜிக்கு ஸ்கெட்ச் போட்ட 5 நாளில் அடுத்த குறி! அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய அனிதா ராதாகிருஷ்ணன்!