''நிதீஷ் குமாரை வைத்து பீகாரை அபகரிக்கலாம் என்று நினைத்தார்கள். அது தேறாது என்று தெரிந்ததும், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துகிறோம் என்று கிளம்பி இருக்கிறார்கள்'' என மோடி அரசை விமர்சித்துள்ளது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி.
''பீகாருக்காக மாபெரும் பொய்'' என்கிற தலைப்பில் முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கத்தில், ''மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொன்னபோதெல்லாம் அதை, ‘நக்சலைட் பார்வை’ என்று சொல்லி வந்த பிரதமர் மோடி. இப்போது திடீரென மனம் மாறியது ஏன்? எதற்காக? என்றால் பீகார் தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் இது. நிதீஷ் குமாரை வைத்து பீகாரை அபகரிக்கலாம் என்று நினைத்தார்கள். அது தேறாது என்று தெரிந்ததும், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துகிறோம் என்று கிளம்பி இருக்கிறார்கள்.

2023 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் பரப்புரை செய்ய வந்த பிரதமர் மோடி அவர்கள், “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என காங்கிரசுக் கட்சி சொல்கிறது. அடுத்ததாக தொகுதி மறுவரையறை நடக்க உள்ளது. காங்கிரசுக் கட்சி சொல்வதைப் போல மக்கள் தொகையின்அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால்,தென் மாநிலங்கள் 100 தொகுதிகளை இழக்க நேரிடும். தென்னிந்திய மக்கள் இதனை ஏற்பார்களா?” என்று கேட்டார் பிரதமர். காதைச் சுற்றி மூக்கைத் தொட முயற்சித்தார் பிரதமர். சாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தொகுதிகள் குறையும் என்று முதலில் மிரட்டியவர் அவர் தான். அத்தகைய பிரதமர் மோடிக்கு திடீர் மனமாற்றம் ஏன் வந்தது? எதனால் வந்தது?
இதையும் படிங்க: மோடி ஆட்சியின் மர்மம்... சோனியாவின் 'தெரியாத' நோய் மறைந்தது எப்படி..? அதிர்ச்சி பின்னணி..!

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதமே தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். அந்த தீர்மானத்தை உடனடியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியும் வைத்திருந்தார்.
“இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமையும், சம வாய்ப்பும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் என்று இப்பேரவை கருதுகிறது. எனவே 2021–ஆம் ஆண்டு மேற்கொண்டிருக்க வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டுமென்றும், அத்துடன் இந்த முறை சாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்தவேண்டும் என்றும் ஒன்றிய அரசை இப்பேரவை ஒரு மனதாக வலியுறுத்துகிறது” என்பதுதான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும். இந்த 15 மாதமாக ஒன்றிய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? ஏன் அதனை ஒப்புக் கொள்ளவில்லை?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே, ‘இந்தியா கூட்டணி ஆட்சிக்குவந்தால் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவோம்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி வந்தார்கள். ராகுல் காந்தி அனைத்துக் கூட்டங்களிலும் இதனைச் சொல்லி வந்தார். “எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 70 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு எடுக்கும் மிக முக்கியமான நடவடிக்கையாக இது இருக்கும். இந்த கணக்கெடுப்பின் மூலம் நாட்டின் தற்போதைய நிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அதன்பிறகு தான் நாடு அடுத்து எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை மதிப்பீடு செய்யமுடியும். எனக்கு சாதியில் ஆர்வம் இல்லை, நியாயத்தில் ஆர்வம் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் 90 விழுக்காடு மக்களுக்கு நியாயம் கிடைத்தே தீரும்” என்று சொன்னார் ராகுல். அப்போதெல்லாம் இதனை ஏற்காதவர் பிரதமர் மோடி அவர்கள். அவர் மூன்றாவது முறையாகஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் ஆகப் போகிறது. இந்த ஓராண்டு காலமும் இதைக் கண்டுகொள்ளாமல்தான் இருந்தார்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டம், அதாவது, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி 1948–ன்கீழ் ஒன்றிய அரசு தான் இந்தப் பணியைச் செய்ய வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 246–ன்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டிய அடிப்படையான பணி அது. மக்கள்தொகை கணக்கெடுப்பினை 2021–ஆம் ஆண்டு மேற்கொண்டிருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை பா.ஜ.க. அரசு. அதற்கான எந்த முயற்சியும் 2025வரை எடுக்கவில்லை. இப்போது திடீரென்று ஞானோதயம் எதனால் வந்தது?

பிரிட்டிஷ் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை 1931 ஆம் ஆண்டு எடுத்தது. அதன்பிறகு எடுக்கப்பட்டவை அனைத்தும் மக்கள் தொகை கணக்கெடுப்புகள்தான். காங்கிரஸ் அரசு 2011 ஆம் ஆண்டு சாதி வாரி கணக்கெடுப்புநடத்தியது. ஆனால் அதனை அவர்கள் வெளியிடவில்லை. வெளியிடலாம், வெளியிடக் கூடாது என்று அமைச்சரவைக்குள் இருவேறு கருத்துக்கள் ஏற்பட்டது. 2014 ஆம் ஆண்டு அவர்கள் ஆட்சி முடிந்தது. அடுத்து வந்த பா.ஜ.க. அரசு அது குறித்து முடிவே எடுக்கவில்லை. 2021 ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றை காரணமாக்கி மக்கள் தொகை கணக்கெடுப்பை பா.ஜ.க. அரசு நடத்தவில்லை. சமூகத்தில் அனைத்து பிரிவினருக்கும் அவர்களது எண்ணிக்கைக்கு தகுந்த உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளாத உயர் வகுப்பினர் அமைப்பாக பா.ஜ.க. இருப்பதால் தான் இதில் அக்கறை காட்ட மறுத்து வந்தது பா.ஜ.க.

பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு கொடுத்ததாக பீற்றிக் கொள்கிறார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்தபிறகு, தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு என்று அதற்கும் கால அளவு வைத்து விட்டார்கள். இவை இரண்டும் முடிய இன்னும் பத்தாண்டுகள் ஆகும் என்பதை அனைவரும் அறிவோம். பெண்களுக்கு உரிமை தரக் கூடாது என்று நினைக்கும் கட்சி தான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல்.
அந்த வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று இப்போதுசொல்வதும் கண்துடைப்புதான். அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. எப்போது தொடங்கும் என்றும் சொல்லப்படவில்லை. பொத்தாம் பொதுவாககொள்கை முடிவு போல் அறிவித்துள்ளார்களே தவிர, செயல் முடிவாக அறிவிக்கவில்லை'' எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பலரின் தூக்கம் கெட்டுவிடும்! I.N.D.I.A கூட்டணிக்குள் வெடி வைத்த மோடி பினராயி விஜயன் ஷாக்!