நீட் தேர்வை ரத்து செய்து, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தும் வகையில், நாளை சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
இந்தத் தீர்மானத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிய உள்ளார். தீர்மானத்தின் மீது சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்று, ஒருமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026-27ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நாளை 3-வது நாளாக நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வு தொடர்பான இந்தத் தீர்மானம் சட்டமன்றத்தில் முக்கிய கவனம் பெறுகிறது.
இதையும் படிங்க: ராமர் கோவில் நன்கொடை விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் மீண்டும் எதிர்க்கட்சிகள் போராட்டம்!
நீட் தேர்வைத் திரும்பப் பெற்று, மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை.
தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு குரல் கொடுத்து வரும் நிலையில், நாளை சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ள இந்தத் தீர்மானம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளதால், லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும், நீட் தேர்வுடன் தொடர்புடைய மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதால், இந்தத் தேர்வு மீது நாடு முழுவதும் மாணவர்களின் நம்பிக்கை குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதன் காரணமாக, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அமைச்சர் அருண்ராஜ் நாளைய சட்டமன்றக் கூட்டத்தில் தீர்மானத்தை முன்மொழிய உள்ளார்.
இதனிடையே, வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை தற்போதைய வடிவிலேயே திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி மற்றொரு தனித் தீர்மானமும் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட உள்ளது.
இந்தத் தீர்மானத்தை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல் செய்ய உள்ளார்.
FCRA திருத்தச் சட்டத்தை தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் அமையும். இதன் மீதும் சட்டமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
இதையும் படிங்க: பாராளுமன்றத்தில் மீண்டும் அமளி! அமித் ஷா ராஜினாமா கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம்! லோக்சபா ஒத்திவைப்பு!