சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இதற்கிடையே, முன்னாள் முதல்வரும் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவருமான ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) அவர்கள் தனது அடுத்த அரசியல் நகர்வு குறித்து ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக ஏற்கெனவே இணைந்துள்ளது. இந்தக் கூட்டணியில் ஓ.பி.எஸ்ஸை சேர்க்க பாஜக முயற்சி மேற்கொண்டது.
ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்.) அவர்கள், "கட்சியிலோ கூட்டணியிலோ பன்னீர்செல்வத்தை சேர்க்க மாட்டோம்" என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதனால் ஏமாற்றமடைந்த ஓ.பி.எஸ்., தனது ஆதரவாளர்களுடன் புதிய திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளார்.
இதையும் படிங்க: திமுகவை வீழ்த்த அதிமுகவுக்கு வாருங்கள்!! ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு முன்னாள் அமைச்சர் அழைப்பு!

நேற்று (ஜனவரி 8) சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் ஓ.பி.எஸ். தனது முக்கிய ஆதரவாளர்களுடன் நீண்ட நேர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்தில் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கை, தனிக்கட்சி தொடங்குவது, யாருடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் (ஜனவரி 9) ஆலோசனைக் கூட்டம் தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ்., தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாடு குறித்து கேட்ட கேள்விக்கு, "தை பிறந்தால் வழி பிறக்கும். பொறுமையாக இருங்கள்" என்று புன்னகையுடன் பதிலளித்தார். இந்தப் பதில் அவரது ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்கினால், அதிமுகவுக்கு குறிப்பிட்ட வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மேலும், அவர் திமுக கூட்டணியுடன் இணையலாமா அல்லது தனித்து போட்டியிடலாமா என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தமிழக அரசியலில் இந்த ஆலோசனைகள் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக கூட்டணிக்கு ஓபிஎஸ், தினகரன் சம்மதம்!! தேர்தல் செலவுக்கு விஜயிடம் பணம் கறக்க திட்டம்! நீடிக்கும் இழுபறி!