சென்னை: 2026 ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன.
நடிகரும் தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவருமான விஜய் தனது தலைமையில் வலுவான கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறார். கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தவெக கூட்டணி இறுதி செய்யப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது. திமுக தனது கூட்டணியை தக்கவைத்துக்கொள்ளவும் புதிய கட்சிகளை இழுக்கவும் தீவிரம் காட்டி வருகிறது.
இதையும் படிங்க: இது சினிமா இல்ல! அரசியல்! தவெக தலைவர் விஜயை சீண்டும் நயினார் நாகேந்திரன்!
அதேநேரம் அதிமுக - பாஜக கூட்டணியை வலுப்படுத்த தொண்டர்கள் விரும்பினாலும், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு காரணமாக அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் அதிமுகவில் மீண்டும் இடம் மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிடிவி தினகரனும் ஓ. பன்னீர்செல்வமும் தவெக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் தேர்தல் செலவு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக கூட்டணி அமைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. \

தவெக வட்டாரங்களில் கூறப்படுவதாவது: அதிமுக - பாஜக கூட்டணியில் இடம் மறுக்கப்பட்டதால் அமமுகவுக்கு தவெகவுடன் இணைவதைத் தவிர வேறு வழியில்லை. ஓ. பன்னீர்செல்வத்தை திமுக கூட்டணியில் சேர்க்க திமுக தரப்பில் முயற்சிகள் நடந்தாலும், ஜெயலலிதாவின் கொள்கையில் இருந்து விலகிவிட்டதாக சொந்த சமூக மக்களின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம் காரணமாக அவரும் தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறார்.
விஜயும் இந்த இரு தலைவர்களையும் கூட்டணியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் அமமுகவுக்கு 30 தொகுதிகளும், பன்னீர்செல்வத்தின் அணிக்கு 10 தொகுதிகளும் கோரப்படுவதாகவும், வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கு கணிசமான தொகை கேட்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் விஜய் குழப்பத்தில் உள்ளார். செலவு விஷயத்தில் தினகரனும் பன்னீர்செல்வமும் சமரசம் செய்தால் கூட்டணி விரைவில் இறுதி செய்யப்படும் என்று தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டணி பேச்சுகள் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தவெகவின் மூன்றாவது அணி வலுவடையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: சிக்கலில் விஜய்! தவெகவின் ஆணிவேரை அசைக்க திமுக திட்டம்!! பக்கா ஸ்கெட்ச்!