நெடுஞ்சாலைகளை சீரமைக்கும் வகையிலும் அதனை பாதுகாக்கவும் வகையிலும், ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு திட்டப் பணிகள் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறை மாநிலத்தில் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து தான் தென்னிந்தியாவின் இரு முக்கிய நகரங்களான சென்னை மற்றும் பெங்களூருவை இணைக்கும் வகையில் 262 கிலோமீட்டர் நீளத்திற்கு பசுமை வழி விரைவு சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதே போன்று மத்திய அரசு, நாடு முழுவதும் 26 இடங்களை தேர்வு செய்து பசுமை வழி விரைவு சாலைகளை கொண்டுவர முடிவு செய்தது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் சென்னை - பெங்களூரூ இடையேயான பசுமை விரைவு சாலை தொடங்கப்பட்டது.

இதையும் படிங்க: திமுக மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்- துரைமுருகன் அதிரடி அறிவிப்பு..!
இதனால் சென்னை மற்றும் பெங்களூருக்கு இடையே தற்போது இரண்டு வழிகள் உள்ளது முதலில் சென்னையில் இருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, பெரும்புதூர், வாலாஜாபேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், கிருஷ்ணகிரி வழியில் பெங்களூருவை அடைய 372 கி. மீ நீளமுள்ள NH48 தேசிய நெடுஞ்சாலையும், இரண்டாவதாக வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, சித்தூர், முள்பகால் வழியாக பெங்களூரு என 335 கிலோமீட்டர் நீளமுள்ள NH75 தேசிய நெடுஞ்சாலை என இரண்டு வழிகள் பயன்பாட்டில் உள்ளன.
தற்போது அமைக்கப்பட்டு வரும் பசுமை விரைவு சாலையானது இந்த முன்னதாக பயன்பாட்டில் இருந்து வரப்படும் இரு நெடுஞ்சாலைகளுக்கு இடையே அமைய உள்ளது. இதனால் முன்னதாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை ஆகும் நிலையில், 262 கிலோமீட்டர் தூரமே கொண்டுள்ளதால், இந்த விரைவு சாலையின் மூலம் இரண்டு முதல் மூன்று மணி நேரங்களில் பெங்களூரு சென்றடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பெரிதளவில் சவால்கள் ஏதும் இல்லை ஏதுமில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையிலும் கடந்த ஆறு வருடங்களாக இந்தப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்னதான் சாலை விபத்துக்கள், வேகமாக செல்லலாம், தொழில் மையத்திற்கு உதவும் என பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய திட்டமாக இருந்தாலும், இந்த பணிகளுக்கான கட்டமைப்பு மற்றும் அமையும் காலமானது தற்போதைய வாழ்வியலுக்கு மற்றும் அப்பகுதியைச் சுற்றி உள்ள மக்களுக்கு பெரும் சங்கடமாகவே அமைந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
ஏனெனில், சென்னை பூந்தமல்லியில் இருந்து வாலாஜா வரை உள்ள சுமார் 120 கிலோமீட்டர் தூரம் சாலை அகலப்படுத்தும் பணி கடந்த ஆறு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்வோர் மேலும் அத்தியாவசியத்தை கொண்ட பகுதி மக்கள் சாலை நெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிப்பினால் கடும் அவதி அடைந்தே வருகின்றனர்.

ஏன் இன்னும் சொல்லப்போனால் கார்கள் லாரிகள் என அவ்வழி பயணம் மேற்கொள்ளும் வாகனங்களும் பெரும் சேதாரங்களுக்கு உள்ளாகுவது அவ்வப்போது நிகழ்ந்த வண்ணமே உள்ளன. புதிய வளர்ச்சி திட்டம் என்ற மனதை ஆறுதல் படுத்தினாலும், இப்பகுதிகளில் வெறும் அகலப்படுத்தும் பணிகளுக்கு மட்டுமே வித்திடப்பட்டது.
ஆனால் அகலப்படுத்தும் பணிகளே கடந்த ஆறு வருடங்களாக மேற்கொண்டு வருவது இப்பகுதி மக்களின் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. வளர்ச்சி திட்டம் எனக் கூறி மக்கள் வாழ்வியலை அல்லல்பட வைப்பது எவ்வாறு வளர்ச்சி திட்டத்திற்கு உள்ளடங்கும் என சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கேள்விகளை அடுக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தான், மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை, தில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

1. விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் விக்கிவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரையிலான பகுதியில் நீண்ட நாட்களாக பணிகள் நடைபெறாத நிலையில், அவற்றை உடனடியாகத் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும்.
2. திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான இரு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும்.
3. தேசிய நெடுஞ்சாலை எண் 47-இல் சேலத்தையடுத்த மாமங்கலத்தில் சிறிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பெரும்புதூர் முதல் வாலாஜா வரையிலான பகுதியை 6 வழிச்சாலையாக மாற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
5. சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் முதல் செங்கல்பட்டு வரை பறக்கும் சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
6. வாணியம்பாடி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கோபிநத்தம்பட்டி குறுக்கு சாலை முதல் அயோத்தியாப் பட்டினம் வரையிலான 4 வழிச் சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
7. ஓசூர் - தருமபுரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ( எண் 844) புளிக்கரை - நக்கல்பட்டி கிராம சாலை சந்திப்பில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும்.
8. தொப்பூர் பவானி NH -555H தேசிய நெடுஞ்சாலையில் மேச்சேரி அடுத்த எருமப்பட்டி அருகே சுங்கச்சாவடி அமைக்கும் பணியை கைவிட வேண்டும் இந்தச் சாலையை இரண்டு புறமும் 10 அடி அகலப்படுத்தி சேதமடைந்த சாலைகளை சீரமைத்த பிறகு சுங்கச்சாவடி அமைக்க வேண்டும்.
9.மேச்சேரி பேரூராட்சி வழியாக உள்ள தேசிய நெடுஞ்சாலையால் மேச்சேரி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க மேச்சேரி பேரூராட்சி பகுதியில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

10. தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கெங்கலாபுரம் முதல் குரும்பட்டி வரையிலும், அதே நெடுஞ்சாலையில் சவுலூர் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் இரு புறங்களிலும் சர்வீஸ் சாலை அமைத்துத் தர வேண்டும்.
11. தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பாளையம்புத்தூர் பிரிவு, சேஷம்பட்டி பிரிவு, தேவர் ஊத்துப்பள்ளம் பிரிவு, புறவடை, ஜாகீர் ஆகிய 5 இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.
12. தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குண்டல்பட்டி என்ற இடத்தில் அமைக்கப்படவுள்ள மேம்பாலத்தை மாற்றி பழைய தருமபுரியில் அமைக்க வேண்டும்.
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் கோரிக்கைகளைக் கேட்ட அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் அந்தக் கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்துவதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தருமபுரி எஸ்.பி.வெங்கடேஸ்வரன், சேலம் மேற்கு அருள், மேட்டூர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்… ராஜகண்ணப்பனிடம் இலாகா பறிப்பு..!