பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் கடந்த 17 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக செயல் தலைவர் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன் வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பரிந்துரை செய்து அதற்கான அறிக்கையை மருத்துவர் ராமதாசிடம் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்தது.
இதனைத்தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கை குழு முன் வைத்த 16 குற்றச்சாட்டுக்கள் குறித்து 31ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க கோரி கடந்த 19ஆம் தேதி அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நோட்டீசிற்கு விளக்கம் அளிக்க வேண்டிய காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்துவிட்ட நிலையில் அன்புமணி விளக்கம் அளிக்காததால் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது.
இந்த ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் உறுப்பினர்களாக உள்ள பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மக, ஸ்டாலின், துரை, சதாசிவம், நெடுஞ்கீரன், பானுமதி சத்தியமூர்த்தி, திருமலை குமாரசாமி, பரந்தாமன் உள்ளிட்டோர் 9 பேர் கலந்து கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், கடந்த 19 ஆம் தேதி ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அன்புமணி மீது முன் வைக்கபட்ட குற்றச்சாட்டுகள் அறிக்கையாக அனுப்பட்டதற்கு பதிலளிக்காததால் இரண்டாவது கூட்டம் தைலாபுரத்தில் இன்று நடைபெற்றது,
இதையும் படிங்க: அதிருப்தியில் ராமதாஸ்… அலட்டிக்காத அன்புமணி! ஒழுங்கு நடவடிக்கை அறிக்கை சமர்ப்பிப்பு
இந்த கூட்டத்தில் உறுப்பினர்களாக உள்ள 9 பேரும் கூட்டத்தில் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்தாக தெரிவித்ததை 9 பேரும் கைப்பட எழுதி கையொப்பமிட்டு அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து அதனை மருத்துவர் ராமதாசிடம் ஒப்படைத்துள்ளோம். நடவடிக்கை எடுப்பது குறித்து இறுதி முடிவை மருத்துவர் ராமதாஸ் எடுப்பார் என்றும் அன்புமணி மீது என்ன நடவடிக்கை எடுப்பார் என்பது குறித்து வரும் 3ஆம் தேதி மருத்துவர் ராமதாஸ் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நோட்டீஸ் கொடுத்தும் கண்டுக்கல! அடுத்த கட்ட நடவடிக்கை? பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் காரசார விவாதம்..!