சென்னை: பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர் உள்ளிட்ட சட்டசபை குழு உறுப்பினர் பதவிகளை ஏற்க பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏக்கள் மறுத்துவிட்டனர்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிந்த பின்னர் தவெக அமைச்சரவையில் பாமக இணையும் என்ற தகவல் பரவியது. அமைச்சரவையில் பாமக சேர்ந்தால் நாங்கள் விலகுவோம் என்று விசிக அறிவித்திருந்தது.
இந்நிலையில் பாமக எம்எல்ஏ சவுமியாவுக்கு பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர் பதவியும் கணேஷ்குமாருக்கு சட்டசபை விதிகள் குழு உறுப்பினர் பதவியும் சிவகுமாருக்கு சட்டசபை மதிப்பீட்டு குழு உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால் அந்தப் பதவிகளை ஏற்க அவர்கள் மறுத்துவிட்டனர்.
இதையும் படிங்க: 234 தொகுதிகளிலும் கவனம் செலுத்தும் பாமக? அன்புமணியின் புதிய திட்டம்! தமிழகம் முழுவதும் நடக்கும் விரிவாக்கம்?!

பாமக வட்டாரங்கள் கூறுகையில், பாமக எம்எல்ஏ சவுமியாவுக்கு பொது கணக்கு குழு தலைவர் பதவி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்பதவி இந்தியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ சையத் பாரூக் பாஷாவுக்கு வழங்கப்பட்டது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பாக சில கோரிக்கைகளை அரசிடம் அன்புமணி வைத்தார். அதை அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சட்டசபை குழு உறுப்பினர் பதவிகளை பாமக எம்எல்ஏக்கள் ஏற்க மறுத்துள்ளனர் எனத் தெரிவித்தனர்.
சட்டசபை வட்டாரங்கள் தெரிவித்தபடி பாமக முக்கிய குழுவின் தலைவர் பதவியை எதிர்பார்த்தது. ஆனால் தலைவர் பதவிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாமக எம்எல்ஏக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திரும்ப திரும்ப தப்பான முடிவு.! பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகமா.? அன்புமணி எதிர்ப்பு.!