வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியலை இந்த மாத இறுதிக்குள் எடப்பாடி பழனிசாமியும், அன்புமணி ராமதாஸும் இணைந்து அறிவிப்பார்கள் எனப் பாமக மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் தங்கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாமக மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் மற்றும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தலைமையிலான நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்துப் பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி விரிவாக்கம் குறித்த ஆலோசனைகளுக்குப் பிறகு கார்த்திக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக், "2026 சட்டமன்றத் தேர்தல் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கான தேர்தலாக அமையும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கனவே அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. மேலும் நான்கு முக்கியக் கட்சிகள் இக்கூட்டணியில் இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன" எனத் தெரிவித்தார். திமுகவை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க: பெற்ற மகனே நெஞ்சில் குத்துகிறார்! தூக்க மாத்திரையிலும் உறக்கம் வரவில்லை! கண்கலங்கிய ராமதாஸ்!
பாமகவின் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசிய அவர், இந்த மாத இறுதிக்குள் பாமகவிற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் மற்றும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமியும் அன்புமணி ராமதாஸும் முறைப்படி அறிவிப்பார்கள். சேலத்தில் 2001-ல் பாமகவிற்கு 4 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர், தற்போது 2 பேர் உள்ளனர். வரும் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று பாமக தனது பலத்தை நிரூபிக்கும் என்றார்.
இன்னும் பத்து நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தர உள்ளார். ஜனவரி 23-ஆம் தேதி சென்னை அருகே நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அப்போது கூட்டணியின் முழுமையான வடிவம் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என அவர் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது பாமக மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: "ரத்தமும் சதையுமாய் வளர்த்த கட்சிக்கு துரோகமா?" அன்புமணிக்கு எதிராக கொதித்தெழுந்த ஜி.கே.மணி!