கடலூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பேசிய கருத்துக்கள் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.
பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு:
கடலூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பெரியார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான், தமிழன்னை உங்களுக்கு என்ன கற்றுக்கொடுத்தார் என பெரியார் கேள்வி எழுப்பியுள்ளார். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கியம் எழுதியவருக்கெல்லாம் கற்றுக்கொடுத்தது யார்? மொழியையே இழிவாகப் பேசிய பிறகு என்ன சமூக சீர்திருத்தம் பேசுகிறீர்கள்? என்றார். எங்கள் மொழியையே இழிவாக பேசிவிட்டு அப்புறம் என்ன சமூக மாற்றம், சீர்த்திருத்தம், அரசியல் இருக்கு?

தொடர்ந்து பெண்ணுரிமை குறித்து பேசிய அவர், “உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்றா தாயோ மகளோ அக்காவோ தங்கச்சியோ அவரோடு உறவு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இரு எனச் சொன்னது பெண்ணிய உரிமையா?” என கேள்வி எழுப்பினார்.
கு.ராமகிருஷ்ணன் பரபரப்பு அறிவிப்பு:
சீமானின் இந்த பேச்சுக்கு திராவிடர் கழகம், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெண்ணுரிமை சம்பந்தமான சீமானின் இந்தப் பேச்சு சர்ச்சையாகியிருக்கிறது. இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு சீமானின் வீட்டுக்குச் செல்கிறேன். பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை அவர் காட்ட வேண்டும்.' என தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
சீமான் வீட்டிற்கு முன்பு போலீஸ்:
கு.ராமகிருஷ்ணனின் இந்த அறிவிப்பை அடுத்து, இன்று காலை முதலே சீமான் வீட்டிற்கு முன்னால் ஏராளமான நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெரியார் குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு அடுத்து மோதல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சீமானின் வீட்டைச் சுற்றி 3 இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சீமானின் வீட்டைச் சுற்றியிலும் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.