"டிடிவி தினகரனுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடந்ததா என்பது எனக்குத் தெரியாது" எனத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், 2026 தேர்தலில் தனது ஆதரவு "நிபந்தனையற்றது" எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகப் பெரியகுளத்தில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த ஓ.பன்னீர்செல்வம், அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்து அவரிடம் சரமாரியாகக் கேள்விகள் எழுப்பப்பட்டன. கூட்டணி நிலைப்பாடு குறித்த கேள்விக்கு முதலில் மௌனம் காத்த அவர், பின்னர் தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
டிடிவி தினகரனின் அமமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுடன் மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு, "எனக்குத் தெரியவில்லை; அப்படி ஏதேனும் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்களா என்பதும் தெரியாது" எனப் பதிலளித்தார். திமுக மற்றும் காங்கிரஸ் இடையே நிலவும் அதிகாரப் பகிர்வு குறித்த கேள்விக்கு, "எல்லாவற்றையும் பேசி முடித்து அவர்கள் அறிவிக்கட்டும், அதன்பிறகு பார்ப்போம்" என்றார். கூட்டணி குறித்துத் தொடர்ந்து கேட்கப்பட்ட போது, "நாங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டோம், எங்கள் ஆதரவு நிபந்தனையற்றது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “நேர்காணல் தேதியில் மாற்றம்; இபிஎஸ்-ஸின் அடுத்த பிளான்!” ஜனவரி 11, 12 நேர்காணல்கள் ஒத்திவைப்பு; அதிமுகவினர் குழப்பம்!
நீங்கள் டெல்லி செல்ல வாய்ப்புள்ளதா எனச் செய்தியாளர் கேட்டபோது, "நல்லவேளை... அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளதா என்று கேட்காமல் விட்டீர்கள்" என நகைச்சுவையாகப் பதிலளித்துச் சிரித்தார். இறுதியாக, எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்துக் கேட்டபோது, "அவர் டெல்லி செல்வது ஒன்றும் உலக அதிசயம் அல்ல" என ஒரே வரியில் எகத்தாளமாகப் பதிலளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், டெல்லி பயணங்களை வைத்து அரசியல் கட்சிகள் தங்களது பலத்தைக் காட்ட முயல்வதை ஓபிஎஸ் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் - துணை ஜனாதிபதி சிபிஆர் சந்திப்பு! பூங்கொத்து வழங்கி வாழ்த்து!