மும்பை: மகாராஷ்டிரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக செவிசாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் போராட்டம் தொடரும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பழங்குடியின மாணவர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் கடந்த 2 வாரங்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு நடத்தும் பழங்குடியின மாணவர் விடுதிகளில் ஏற்பட்டதாக கூறப்படும் உயிரிழப்புகள் மற்றும் பல்வேறு முறைகேடுகளை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்தி கடந்த வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று மாணவர்களை சந்தித்தார். எனினும், மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பா.சிதம்பரத்திற்கு அரசு பதவி கொடுத்த முதல்வர் விஜய்? கோபித்துக் கொண்ட ராகுல்காந்தி! காங்கிரசில் சர்ச்சை!

அதில், மகாராஷ்டிரத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருவதாகவும், இதற்கு தேர்வு அல்லது ஆள்சேர்ப்பு முறைகேடுகள் மட்டுமே காரணம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்வி அமைப்பின் மீதான மாணவர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலும் மத்திய அளவிலும் மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வினாத்தாள் கசிவு, ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் தாமதம், கல்விச் செலவு அதிகரிப்பு, மாணவர் விடுதிகளில் மோசமான நிலை, தரமற்ற உணவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை பாதுகாக்க முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானவை என்று கூறியுள்ள ராகுல் காந்தி, அரசு உடனடியாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில், நீதி கிடைக்கும் வரை மாணவர்களின் போராட்டக் குரல் மேலும் வலுப்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாணவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த பதிவு தேசிய அளவில் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ராகுலுக்கு ‘செக்’ வைத்த அதானி சந்திப்பு? கர்நாடக முதல்வர் சிவகுமாரின் விளக்கம் என்ன?