தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்களுக்குப் பிறகு, முதல்வர் விஜய் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையேயான அரசியல் தொடர்புகள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி, தமிழக வெற்றிக் கழக அரசில் இணைந்த பிறகு இரு தலைவர்களும் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அண்மையில் வெளிநாட்டு பயணத்தை முடித்து டெல்லி திரும்பிய ராகுல் காந்தி, தனது முதல் முக்கிய நடவடிக்கையாக மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தியை டெல்லியில் காங்கிரஸின் ஒருங்கிணைப்பு பொறுப்பை கவனிக்கும் முக்கிய நபராக நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், காங்கிரஸ் வட்டாரங்களில் இதுபற்றி பரவலாக பேசப்படுகிறது.
இதற்கிடையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தின் போது, பிரவீன் சக்கரவர்த்தியின் செல்போன் வாயிலாக முதல்வர் விஜயுடன் ராகுல் காந்தி பேசியதாகவும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ‘INDI’ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

அதற்கு, “திமுக அந்த கூட்டணியில் இருக்கும் வரை நாங்கள் பங்கேற்க மாட்டோம்” என்று விஜய் தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. எனினும், இந்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
இதனுடன், கேரளாவில் நடைபெறவுள்ள போதைப்பொருள் தடுப்பு தொடர்பான மாநிலங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, சென்னை வந்து முதல்வர் விஜயை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்ததும் கவனம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பும் ராகுல் காந்தியின் அரசியல் வியூகத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
தென் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநில முதல்வர்களுடன் முதல்வர் விஜய் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே ராகுல் காந்தியின் விருப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. 2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தென் இந்தியாவில் விஜயின் செல்வாக்கை பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், மேகதாது அணை உள்ளிட்ட தமிழகம்-கர்நாடகா இடையேயான நீர்விவகாரங்கள் காரணமாக, கர்நாடகாவில் விஜய் பிரசாரம் செய்வாரா என்பது தற்போது அரசியல் அரங்கில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: வெளிநாட்டு பயணத்தில் விதிமீறல்? அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!