அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம், நலத்திட்ட உதவிகளை மட்டும் வழங்குங்கள் என சொல்லியும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரம்மாண்ட கேக் கட்டிங்கை நடத்தியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே ஒருமுறை கட்டளை போட்டுவிட்டால் அதை கடைசி தொண்டன் கூட மீறக்கூடாது என்ற ராணுவக் கட்டுப்பாடு உள்ளது. ஆனால் அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்ட உத்தரவை சிறிதும் சட்டை செய்யாமல் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்துள்ள காரியம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி. குன்னத்தூரில், மறைந்த எம்ஜிஆர் ,ஜெயலலிதா திருவுருவச் சிலை அமைக்கப்பட்ட வளாகத்தில், முன்னாள் அதிமுக அமைச்சரும், திருமங்கலம் தொகுதி எம்எல்ஏ - வுமான ஆர்.பி. உதயகுமார், எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் , அவரது உருவம் பதித்த படத்துடன், 71 கிலோ பிரம்மாண்ட கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2 நாளா போனை எடுக்கல.. நேர்ல போயி பார்த்தா..! ஈரோடு தோட்டத்து வீட்டில் திக் திக் சம்பவம்..!

அதில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகள் வெற்றி பெறுவோம் என்ற சூளுரை தெரிவித்த வாசகங்களுடன், போரில் ராணுவ வீரர்கள் வெற்றி பெற வேண்டியும், அவர்கள் நலமுடன் இருக்க வலியுறுத்தி வாசகங்களும் பிரமாண்ட கேக்கில், எழுத்து வடிவில் பொறிக்கப்பட்டிருந்தது.அந்த பிரம்மாண்ட கேக்கை ஆர்.பி. உதயகுமார் கத்தியால் வெட்டி, எடப்பாடி பழனிச்சாமி நீடூடி வாழ்க என்ற கோஷத்துடன், கேக்கை வெட்டி தனது நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு ஊட்டி விட்டும் மகிழ்ந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் தனது பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள்மற்றும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் உள்ளிட்டவட்டை மட்டுமே நடத்தக்கூறியுள்ள நிலையில், அவரது பிறந்த நாளை பிரம்மாண்ட கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் ஆர்பி உதயகுமார் தனது நிர்வாகிகளுடன் கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் இந்த சமயத்தில் இந்த ஆடம்பரம் எல்லாம் தேவையா? என அதிமுகவினரே சோசியல் மீடியாக்களில் குறைக்கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: சேலம் பட்டாசு விபத்து.. பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு.. நிவாரணத்தை உயர்த்தி வழங்க இபிஎஸ் கோரிக்கை..!