காரைக்குடி: சிவகங்கை மாவட்டத்தில் வி.ஐ.பி. அந்தஸ்து பெற்ற காரைக்குடி சட்டசபை தொகுதி, 2026 தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இத்தொகுதியில் போட்டியிட அனைத்து கட்சிகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடியில் நடத்திய மாநாட்டில் மாவட்டத்தின் மற்ற மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். ஆனால், காரைக்குடி தொகுதி வேட்பாளரை மட்டும் அறிவிக்காமல் சஸ்பென்ஸில் வைத்துள்ளார். இதனால், அத்தொகுதியில் சீமானே போட்டியிட திட்டமிட்டுள்ளார் என்ற கருத்து அக்கட்சி வட்டாரங்களில் நிலவுகிறது.
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் காரைக்குடி தொகுதி பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால், பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாண்டித்துரையும் முன்னாள் சட்டசபை உறுப்பினர் ஒருவரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், அ.தி.மு.க.வினரும் கட்சி தலைமையிடம் தொகுதியை கேட்டு போட்டியிடுகின்றனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி காரைக்குடியில் போட்டியிடும் என்று அக்கட்சியினர் உறுதிப்படக் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: கண்ணைக் காட்டிய ஸ்டாலின்... சீமானுக்கு காத்திருக்கும் செம்ம ஷாக்... நாதக தம்பிகள் தலையில் இடியை இறக்கிய திமுக...!
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொண்டர்கள் காரைக்குடி தொகுதியை தீவிரமாக டார்கெட் செய்துள்ளனர். கட்சித் தலைமை வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே, சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளரும் மருத்துவருமான டாக்டர் பிரபு தான் காரைக்குடியில் போட்டியிடுவார் என்று அக்கட்சி தொண்டர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

தவெக மாநாடுகள் நடக்கும் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தி சிகிச்சை அளித்து வரும் டாக்டர் பிரபு, கட்சித் தலைவர் விஜயிடம் நம்பிக்கை பெற்றவராக உள்ளார். இதனால், காரைக்குடியில் அவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இதன் வெளிப்பாடாக, கண்ணங்குடி ஒன்றியத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில், மாற்றுக் கட்சியிலிருந்து தவெகவில் இணைந்து ஒன்றிய செயலாளரான அசோகன், “காரைக்குடி தொகுதியில் டாக்டர் பிரபு தான் போட்டியிடுவார், அவருக்கு ஆதரவு தாருங்கள்” என்று பேசினார். இதனால், கட்சித் தலைமை அறிவிப்புக்கு முன்பே தவெக தொண்டர்கள் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இது குறித்து டாக்டர் பிரபு கூறுகையில், “அசோகனை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். என்னை அறியாமல் அவர் என்னை வேட்பாளர் என்று கூறிவிட்டார். கட்சித் தலைவர் விஜய் அறிவிக்காமல் நாம் சொல்லக் கூடாது என்று அவரிடமும் தலைமைக்கும் தெரிவித்துவிட்டேன்” என்றார்.
தேர்தல் நெருங்க நெருங்க, காரைக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இத்தொகுதி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: களமாடத் தயார்... டிச.27ல் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம்... சீமான் அறிவிப்பு...!