சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்ட நிலையில், முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தி.மு.க.வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சார்பில் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று இந்த நியமனத்தை அறிவித்தார். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தபோது தி.மு.க.வுடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணி வந்தார். சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவராகவும் இருந்த காலத்தில் தி.மு.க.வுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் எழுப்பினார். தி.மு.க.வுக்கு சிரமம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கூட அவர் தானாக முன்வந்து வலுவான ஆதரவை அளித்து வந்தார்.
இதையும் படிங்க: #BREAKING: தமிழ்நாடு காங். தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்..! அதிரடி அறிவிப்பு..!!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் செல்வப்பெருந்தகை. அதற்கு மேல், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்து தனியார் தொலைக்காட்சியில் பேட்டியும் அளித்தார். முதலமைச்சர் விஜய்யின் சட்டமன்ற நடவடிக்கைகளை ‘அநாகரிகம்’ என்று விமர்சனம் செய்ததும் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இத்தகைய சூழலில், செல்வப்பெருந்தகை விரைவில் தி.மு.க.வில் இணையக் கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பலமாகப் பேசப்படுகிறது. அவருடன் சில காங்கிரஸ் நிர்வாகிகளும் தி.மு.க.வில் இணையலாம் எனக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் உள் நடவடிக்கைகள் மற்றும் தலைமை மாற்றம், தமிழ்நாட்டில் காங்கிரஸ் – தி.மு.க. உறவில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துமா என்பது அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. செல்வப்பெருந்தகையின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை அரசியல் களம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் மற்றும் கூட்டணி அரசியல் ஆகியவை இந்த மாற்றங்களால் பாதிக்கப்படலாம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: NLC பங்குகளை தாரைவார்ப்பதா..? மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!