கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் கொங்கு மண்டல அமைப்பு பொதுச் செயலாளருமான கே ஏ செங்கோட்டையன் கரட்டடிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், தமிழகம் முழுவதும் தவெக சார்பில் டாக்டர் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தவெக தலைமை கழகத்தின் ஆணைப்படி இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றார்.
குறிப்பாக ஆணவம் என்பது உண்மையை மறைக்கும், கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது எனக்கூறிய அவர், இளைஞர்களின் எழுச்சி நாயகனாக எதிர்கால தமிழகத்தை ஆளப்போகின்ற தலைவர் விஜய் சுற்று பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இளைஞர்களின் எழுச்சி நாயகன் மட்டுமன்றி எதிர்கால தமிழகத்தின் ஆளும் சக்தியாக தமிழக மக்களால் பார்க்கப்படுகிறார் என்றார்.
நீங்கள் எடுத்திருக்கும் முடிவு அவசரப்பட்டு எடுத்த முடிவு என சசிகலா கூறிய விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த செங்கோட்டையன், அடுத்தடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் எழுந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: “கோவத்தில் இப்படி முடிவெடுத்திருக்கக்கூடாது” - தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு வி.கே.சசிகலா அட்வைஸ்...!
செங்கோட்டையன் குறித்த சர்ச்சைகள்:
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், கடந்த 27ம் தேதி விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவர் தவெகவில் இணைந்ததில் இருந்தே தமிழக அரசியலில் பல பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த போது சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருந்தது, கட்சியில் இணைந்த அன்றே தவெக நிர்வாகிகளுடன் சென்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது, அலுவலக பேனரில் விஜய் படத்துடன் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களை வைத்தது, கார்த்திகை தீபத்திருவிழா வாழ்த்து செய்தியில் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது என செங்கோட்டையன் தவெகவில் இணைந்தாலும் இன்னமும் அதிமுகவை விட்டு வெளியே வரவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
அதேபோல் அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் என டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலாவுடன் கைகோர்த்த செங்கோட்டையன் அவர்களை அப்படியே கை கழுவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது சர்ச்சையைக் கிளப்பியது. அதிமுகவை ஒன்றிணைக்கவே முடியாது என்பதால், மூவர் கூட்டணியை கை கழுவிய செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் கிடைத்த முக்கிய பொறுப்பிற்கு தாவி விட்டார் என கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனிடையே ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த வி.கே.சசிகலா, ஒருவர் மீது கோபம் இருக்கிறது என்பதற்காக பெரிய முடிவுகளை அவசரப்பட்டு எடுக்கக் கூடாது. மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் வந்தவர்கள் இதுபோலச் செய்வதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை எனக்கூறியிருந்தார்.
இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு செங்கோட்டையனிடம் பதில் பெற காத்திருந்த செய்தியாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் பாதியிலேயே செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டு அவசர, அவசரமாக எழுந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: இப்படியே போனா முழுநிலவு அமாவாசை ஆகிடும்… நிர்வாகிகள் நீக்கம் குறித்து செங்கோட்டையன் சாடல்…!