தி.மு.க.வின் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பரப்புரைத் திட்டத்தின் துவக்கம் மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. முக்கிய நிர்வாகி செந்தில்பாலாஜி, கட்சியின் இலக்குகள் மற்றும் எதிர்ப்புக் கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்தார். வரவிருக்கும் தேர்தலுக்கான தி.மு.க.வின் உத்திகள் குறித்துப் பேசினார். கோவையில் தி.மு.க.வின் வெற்றி உறுதி என்றும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் ஒருபோதும் பலிக்காது என்று தெரிவித்தார்.
கோவையில் நடைபெற்று வரும் தேர்தல் களப்பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அவர் பூத் கமிட்டியினருக்குக் கண்டிப்பான உத்தரவுகளையும் இலக்குகளையும் நிர்ணயம் செய்தார். ஒவ்வொரு பூத்துக்கும் உட்பட்ட பகுதியில், அரசின் சார்பில் செய்யப்பட வேண்டிய நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் ஒரு படிவத்தில் பூர்த்தி செய்து கழகத்தின் தலைமையகத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.
தி.மு.க.வின் அசுர சாதனைகளையும் மகத்தான திட்டங்களையும் வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்து எடுத்துரைக்க வேண்டும். தேர்தலை விட இந்த முறை கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டும். குறிப்பாக, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தது 50% வாக்குகளைக் கழகம் பெற வேண்டும் என்று அவர் இலக்கு நிர்ணயம் செய்தார். இதற்குப் பூத் இளைஞர் அணியினர், மகளிர் அணியினர் என அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: "210 தொகுதியா? 70-ஐ கூட தாண்ட மாட்டார்கள்": எடப்பாடி பழனிசாமிக்கு வைகோ பதிலடி!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவைக்கு அதிகப்படியான திட்டங்களை வழங்கியுள்ளார் என்றும், அதையெல்லாம் மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகளாக மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
திட்டத்தின் செயல்பாட்டுத் திட்டம் குறித்து விளக்கிய அமைச்சர், முதலமைச்சர் அவர்கள் இந்தக் களப்பணிகளைத் துவக்கி வைத்திருப்பதாகவும், இந்தத் திட்டம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ஒரு நாளைக்கு ஒரு வாக்குச்சாவடி தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்குக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. மொத்தம் 112 பூத்துகள் பிரிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தக் களப்பணிகள் வரும் ஜனவரி மாதம் 10ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.
வரும் ஜனவரி மாதம் பெரியார் நூலகம் திறக்கப்பட உள்ளது என்றும், கோவையின் வளர்ச்சியில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் செந்தில் பாலாஜி ஆணித்தரமாகப் பதிலளித்தார். அவர் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து, அவருடைய ஆசை. அவரால் ஒவ்வொரு கருத்தையும் கூற முடியும். 2026-ல் அவர் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவார் என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும்" என்று சவால் விடுத்தார்.
அமலாக்கத் துறை சோதனை குறித்துப் பேசிய அவர், "பா.ஜ.க. எத்தனை முயற்சிகளை எடுத்தாலும், இது பெரியார், கலைஞர், அண்ணா மண். அவர்கள் நினைப்பது ஒருபோதும் நிறைவேறாது. என்னவானாலும் மக்கள் தான் முடிவெடுப்பார்கள்," என்று கூறினார்.
விஜய் தி.மு.க.வை மட்டும் விமர்சித்தது குறித்து, "வரலாற்றில் ஒவ்வொரு முறையும் தி.மு.க.வைத்தான் போட்டியாக நினைக்கிறார்கள். தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்கள் அவர்கள்தான் வீழ்வார்கள்" என்றும், "கோவையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமைவது நிச்சயம்" என்றும் உறுதியாகக் கூறினார்.
"போலி வாக்காளர்கள் என்று கூறுவதே முற்றிலும் தவறு" என்று சாடினார். "எந்த அடிப்படையில் ஒருவர் போலி வாக்காளர் எனக் கூறுகிறார்கள்? தேர்தல் ஆணையம் தான் அதனைச் செய்திருக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை தகுதியானவர்கள் யாரும் விடுபட்டு விடக் கூடாது; தகுதி இல்லாதவர்கள் சேர்ந்து விடக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு."
பாதாள சாக்கடை வசதிகள் கடந்த ஆட்சியில் சரியாகச் செய்யப்படவில்லை என்றும், பணிகள் முடிந்ததும் தார் சாலைகள் போடப்படும் என்றும் வாக்களித்தார். திட்டங்கள் தேர்தலுக்காக அறிவிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டிற்கு, "திட்டங்களுக்கான டெண்டர் போடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படும். திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகுதான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும், டெண்டர் போடப்படும்" என்று விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி'! நாளை தொடங்குகிறது திமுகவின் தேர்தல் பரப்புரை!