மயிலாடுதுறை அருகே எலந்தங்குடியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-வது மாநில 2 நாள் மாநாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில சிறப்பு தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சாதி ஆணவப் படுகொலைகள், வன்முறைகள், சமூக கொடுமைகளால் பாதிக்கப்பட்டு நீதிக்காக போராட்டக் களத்தில் நிற்கும் சமூக போராளிகள் 20 பேருக்கு பாராட்டு தெரிவித்து, அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
மாநாட்டில் அவர் பேசுகையில், இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பலர் பட்டியலினத்தை சார்ந்தவர்கள் கிடையாது. இருப்பினும் அவர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக தாங்கள் சார்ந்த ஜாதியை எதிர்த்து களத்தில் போராட்டம் நடத்தி வெற்றி கண்டனர். இந்த வரலாறு தமிழ்நாட்டில் தொடர வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் பிரச்னை நேர்ந்தால்; தேர்தல் அரசியல், வாக்கு வங்கியைப் பற்றி கவலைப்படாமல், அவர்களது சட்டபூர்வமான உரிமைகளை நிலைநாட்டுவதே நமது ஆகப்பெரிய கடமை.
பஞ்சமி நிலம் மீட்புக்கு சட்டம், அரசாணை எதுவும் தடையில்லாத நிலையில், ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லாததே முக்கியமான தடையாக இருக்கிறது. பஞ்சமி நிலம் என்று தமிழ்நாடு அரசு இதுவரை கண்டறிந்துள்ள இரண்டரை லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அரசு செய்யத் தவறினால், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நாங்களே நிலத்தை பறிமுதல் செய்து நிலமற்ற பட்டியல் சாதியினரிடம் ஒப்படைப்போம்.
இதையும் படிங்க: திமுகவை ஒழிக்க நம் வலிமையை காட்ட வேண்டும்.. அதிமுகவை ஒன்று சேர அழைக்கும் சசிகலா..!!
நாங்கள் பறிமுதல் செய்து ஒப்படைப்பதா? அல்லது அரசாங்கமே மீட்டு ஒப்படைப்பதா? என்பதை ஆட்சியாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வருங்காலங்களில் பஞ்சமி நில மீட்பு இயக்கத்தை மாநில அளவில் பிரம்மாண்டமான நில மீட்பு இயக்கமாக நடத்துவோம் என்றார்.
இதையும் படிங்க: சொன்னா நம்புங்க! ஆற்றில் மிதந்தது தீர்வு காணப்பட்ட மனுக்கள்... ஆட்சியர் விளக்கம்