தமிழக அரசியல் களத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், அதிமுகவின் முன்னாள் இடைக்கால பொதுச்செயலாளருமான வி.கே. சசிகலா, இன்று வெளியிட்ட திடீர் அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அரசு மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், தமிழகத்தில் நிர்வாகத் திறனின்மையை எடுத்துரைத்தார். சசிகலாவின் அறிக்கையில், "ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் ஒரு முன்மாதிரி மாநிலமாக இருந்தது. ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட புறக்கணிக்கப்படுகின்றன. சென்னையில் வெள்ள பாதிப்புகளை சமாளிக்க அரசு தவறிவிட்டது," என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் திமுக அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்.. கடுமையாக சாடிய அதிமுக..!!
மேலும், "முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ நடத்துவதை விட, மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்," என காட்டமாக விமர்சித்தார். அதிமுகவை மீட்டெடுக்கும் முயற்சியாகவே இந்த அறிக்கையை அரசியல் நோக்கர்கள் பார்க்கின்றனர். சசிகலா, தனது தலைமையில் அதிமுகவை ஒருங்கிணைத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
"ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்குவது எனது பொறுப்பு," என்று அவர் உறுதியளித்தார். புரட்சித்தலைவரின் மறைவிற்கு பிறகு மாற்றார் பலரும் இனி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் இயக்கமே இருக்காது. அது சிதறுண்டு விடும் என கனவு கண்டு கொண்டிருந்த நேரத்தில், இதோ தாயாக நான் இருக்கிறேன். கழகத்தையும் தொண்டர்களையும், தமிழக மக்களையும் காப்பேன் என சூளுரைத்து, விரோதிகளின் சதிச்செயல்களையெல்லாம் துணிச்சலுடன் முறியடித்து, சுமார் 35 ஆண்டுகளாக கழகத்தை கட்டி காப்பாற்றி, சேதாரமின்றி வளர்த்தெடுத்து, 6 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று அனைத்துத் தரப்பு மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்று நல்லதொரு ஆட்சியை வழங்கியவர் நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா என்று சசிகலா புகழாரம் சூட்டினார்.
ஆனால் இன்று நிலைமை வேறாக உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கம், இன்றைக்கு எவனமாக பேசும் அளவுக்கு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. நம் இருபெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் இன்று கழகம் பெரும் சோதனைக்கு ஆளாகி உள்ளது. கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம் கோர்த்து ஒன்றிணைந்து நம் எதிரியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
எனவே மனமாச்சர்யங்களை மறந்து, கருந்து வேறுபாடுகளை கடந்து கட்சி முக்கியம் கட்சியின் நலன் முக்கியம், கட்சியின் எதிர்காலம் முக்கியம் கட்சியின் வெற்றி முக்கியம் அந்த வெற்றி தி.மு.க. என்ற தீய சக்தியை வரும் சட்டமன்ற தேர்தலில் வீழ்த்துவதாக அமைவது மிக முக்கியம் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார்.
கழகம்தான் எனது ஒரே குடும்பம். யாராலும் என்னை ஒரு வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது. நான் எப்பொழுதும் சுயமாக சிந்தித்து அதன்படி செயல்படுகிறேன். எனக்கு நம் கழகத்தினர் யார் மீதும் எந்தவித கோபமோ, வருத்தமோ இல்லை. நான் இதைவிட கடினமான சூழ்நிலைகளையெல்லாம் எனது சிறு வயதிலேயே கடந்து வந்துவிட்டேன். நம் இருபெரும் தலைவர்களிடம் நான் பெற்ற பயிற்சி என்னை பக்குவப்படுத்தி இருக்கிறது.
"ஊரு ரெண்டுபட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்ற பழமொழிக்கேற்ப திமுக இப்போது குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது. ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழ்நாட்டின் ஆகப்பெரிய கட்சி என்பதை நம் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் பலமுறை நிரூபித்து இருக்கிறார்கள். அந்த வலிமையை மீண்டும் நாம் பெற்றாக வேண்டும்.

ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அசுர பலத்துடன் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை நாம் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம். மீண்டும் கழக ஆட்சி அமைவது உறுதி. எனவே கட்சியில் உள்ள முன்னோடிகள் முதல் கடைக்கோடி தொண்டார்கள் வரை ஒவ்வொருவரும் சிந்தியுங்கள். வெற்றிக்கான பாதையில் பயணித்திடுவோம் என்று சசிகலா கூறியுள்ளார்.
இந்த அறிக்கைக்கு திமுக தரப்பில் உடனடி பதில் இல்லை என்றாலும், அதிமுகவின் தற்போதைய தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, சசிகலாவின் அரசியல் நகர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சசிகலாவின் இந்த அறிக்கை, தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வாக்காளர் உரிமை யாத்திரை!! ராகுல் காந்தியுடன் கைகோர்க்கும் மு.க.ஸ்டாலின்!!