சென்னை: கரூர் மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகுமாறு சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஏற்று விஜய் 12-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும், அதற்காக 11-ம் தேதி டெல்லி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2025 செப்டம்பர் 17-ம் தேதி கரூரில் நடைபெற்ற விஜய் மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இது 2025-ம் ஆண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய கொடூர சம்பவமாக பதிவானது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ குழுவினர் கரூரில் முகாமிட்டு விசாரணையை தொடங்கினர். அங்குள்ள பொதுமக்கள், தவெக நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விரிவாக விசாரணை நடத்தினர். அதன்பிறகு அடுத்த கட்ட விசாரணைக்காக தவெக நிர்வாகிகளுக்கு டெல்லி சிபிஐ தலைமையகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க: ஈரோடு வரைக்கும் வந்தீங்களே!! கரூருக்கு போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்!

இதையடுத்து தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணை பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் கடந்த டிசம்பர் 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை டெல்லியில் ஆஜராகினர்.
மூன்று நாட்கள் நடந்த விசாரணையில் முதல் நாள் 9 மணி நேரமும், இரண்டாவது நாள் 7 மணி நேரமும், மூன்றாவது நாள் 3 மணி நேரமும் தவெக நிர்வாகிகளிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதேபோல் கரூர் கலெக்டர் தங்கவேலு, எஸ்பி ஜோஸ் தங்கையா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் விசாரணைக்கு ஆஜராகினர்.
விஜய்யிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜனவரி 6-ம் தேதி விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பப்பட்டது. 12-ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை எழுப்ப சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் விஜய் 11-ம் தேதி டெல்லி செல்லவும், 12-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகவும் திட்டமிட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரூர் கொடுந்துயரம்!! விஜயிடம் விசாரிக்க சிபிஐ திட்டம்!! டெல்லியில் இருந்து பறக்கும் சம்மன்!