சென்னையில் மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சியின் மகளிர் அணி நிர்வாகியான சினேகா மோகன்தாஸ் கடந்த ஜூலை 21ம் தேதி சென்னையில் சாலையோரத்தில் ஆட்டோ ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு, அது கைகலப்பாக மாறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. சினேகா மோகன்தாஸ் பயணித்த ஆட்டோவை ஓட்டுநர் வேறு பாதையில் செலுத்தியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறி, ஆட்டோ ஓட்டுநர் சினேகா மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

தன் மீது கை வைத்ததால் ஆத்திரமடைந்த சினேகா பதிலுக்கு ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்துள்ளார். இதனால் சாலையோரத்தில் ஏற்பட்ட கைகலப்பு அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியது. இதனிடையே இதுகுறித்து பேசிய சினேகா, ஆட்டோ டிரைவர் பிரசாத் புக்கிங் ஆப்பில் மேப்பை அணைத்துவிட்டு ஆட்டோவை வேறு வழியில் இயக்கியதாகவும், அதை தட்டிக்கேட்டதால் தன்னை கீழே இறங்குமாறு கூறி தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் ஆபத்தான வகையில் ஆட்டோவை ஓட்டியதாகவும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: போதைப் பொருள் வழக்கு; மீண்டும் ஶ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்!!
இதுதொடர்பான வீடியோ வைரலாக, மயிலாப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காவல் நிலையம் அழைத்து சென்று இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த பிரசாந்த் (25) என்பது தெரியவந்தது. மேலும் ஆட்டோ ஓட்டுநர் தாக்கியதில் சினேகா மோகன்தாஸுக்கு காயம் ஏற்பட்டு, ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து ஆட்டோ ஓட்டுநர் பிரசாந்த் மீது ஆபாசமாக பேசுதல், அடித்தல், பெண்ணை இழிவு செய்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் செய்து கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மநீம பெண் நிர்வாகி சினேகா மோகன்தாஸ் கைது செய்யப்பட்டார். மயிலாப்பூர் காவல் நிலையத்தில் இன்று ஆஜரான சினேகா மோகன்தாஸை கைது செய்த போலீசார் அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

சினேகா மோகன்தாஸ், தமிழகத்தில் ஃபுட் பேங்க் இந்தியா என்ற அமைப்பை நடத்தி வருகிறார். 2020 மகளிர் தினத்தன்று பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை ஒரு நாள் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று, தேசிய அளவில் பிரபலமானார். இதைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து, சென்னை மண்டல மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியை ஏற்றதற்கு கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மநீம கட்சி, 2018இல் கமல்ஹாசனால் தொடங்கப்பட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. சினேகா, கட்சியின் மாநில செயலர் அந்தஸ்தில் உள்ள முக்கிய பெண் நிர்வாகிகளில் ஒருவராக விளங்குகிறார். அவரது சமூக வலைதள செயல்பாடுகளும், அரசியல் ஈடுபாடும் கவனம் பெற்றுள்ளன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே விவாதங்கள் எழுந்துள்ளன. மேலும், இது கட்சியின் பொதுத்தோற்றத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?