தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் இன்று பிரம்மாண்டப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசின் மெத்தனப் போக்கை கடுமையாகச் சாடினார்.
தற்போதைய இடஒதுக்கீடு மற்றும் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் பழைய புள்ளிவிவரங்களைக் குறித்து அன்புமணி விமர்சித்தார்.
அந்தக் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தபோது பிளாக் அண்ட் ஒயிட் டிவி கூட கிடையாது; அம்பாசிடர் கார் கூட வரவில்லை. அந்தப் பழைய கணக்கை வைத்துக்கொண்டுதான் இன்றும் படிப்பு, வேலை, கடன் என அனைத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
சமூகத்தினர் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது தெரிந்தால்தான் உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட முடியும். அது தெரியாமல் எதை வைத்துச் சமூகநீதி பேசுவீர்கள் என அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு: "தூங்குவதுபோல் நடிக்கிறது திமுக!" - பாமக வழக்கறிஞர் பாலு ஆவேசம்!
பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வது முற்றிலும் பொய். பீகார் போன்ற மாநிலங்கள் நடத்தியிருப்பதே அதற்குச் சான்று. பாமக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, பிரதமர் மோடி 2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார். இதற்காக ₹14,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 1931-க்குப் பிறகு இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்போகும் முதல் அரசு இதுதான் என்று கூறினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது வெறும் கணக்கு மட்டுமல்ல, அது ஒரு சமூகநீதிப் பிரச்சனை. கடந்த நூறு ஆண்டுகளாகச் சாதியை வைத்துதான் அடக்குமுறை நடந்தது. அதைச் சரிசெய்ய வேண்டுமானால் ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சரியான இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும். அதற்கு இந்தக் கணக்கெடுப்பு மிக அவசியம், என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழப்பு: 'கல்வியில் சிறந்த தமிழ்நாடா? அன்புமணி கண்டனம்!