கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்திற்கு 11 லட்சம் கோடி நிதி வழங்கியதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுவது அப்பட்டமான பொய் என்றும், தமிழகம் செலுத்திய வரியை விட மிகக் குறைந்த அளவே மத்திய அரசு திருப்பி அளித்துள்ளது என்றும் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற “உலகம் உங்கள் கையில்” மடிக்கணினி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் விமர்சனங்களுக்கு அதிரடியாகப் பதிலடி கொடுத்தார். “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது அமித்ஷாவின் பகல் கனவு; அது ஒருபோதும் நடக்காது” என்று முழங்கிய அவர், மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாகப் புள்ளிவிவரங்களுடன் விளக்கமளித்தார். மேலும், ஆட்சியில் பங்கு குறித்த விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடமும் திமுக தலைமையும் பேசி முடிவெடுக்கும் என்றும், இதில் மற்றவர்கள் பேசுவதற்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.
நெல்லையில் 1,873 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழகத்தின் நிதி உரிமைகள் குறித்து மத்திய அரசைத் தோல் உரித்துக் காட்டினார். "இந்தியாவிலேயே அதிக ஜிஎஸ்டி செலுத்தும் மாநிலமாகத் தமிழகம் உள்ளது; ஆனால் நாம் செலுத்தும் வரியில் பாதியை மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. சுங்க வரி, செஸ் வரி என அனைத்தையும் மொத்தமாக வசூலிக்கும் மத்திய அரசு, தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் மட்டும் பாரபட்சம் காட்டுகிறது" என வேதனை தெரிவித்தார். 11 லட்சம் கோடி கொடுத்ததாகக் கூறும் அமித்ஷா, தமிழகத்திலிருந்து மத்திய அரசு வசூலித்த வரிப்பணம் அதைப் போல இரண்டு மூன்று மடங்கு அதிகம் என்பதை மறைக்கிறார் எனச் சாடினார். சமக்ர சிக்ஷா அபியான் மற்றும் புயல் நிவாரண நிதியைக் கூட வழங்காமல் தமிழகத்தை மத்திய அரசு ஏமாற்றி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: "அணுமின் நிலையங்களை தனியார் மயமாக்கினால் கேன்சர் பரவும்" - சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை!
பாஜக-வின் ஊழல் புகார்களுக்குப் பதிலளித்த அப்பாவு, “திருடன் ஒருவன் திருடிவிட்டு, கூட்டத்தில் இருப்பவர்களைப் பார்த்து அதோ திருடன் எனக் கைகாட்டுவதைப் போல அமித்ஷாவின் பேச்சு உள்ளது” என நக்கலடித்தார். 50 கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனைத் தள்ளுபடி செய்யும் பாஜக அரசுக்கு ஊழல் குறித்துப் பேசத் தகுதியில்லை என்றும், ஜாதி மதக் கலவரங்களைத் தூண்டி தமிழகத்தில் கால்பதிக்க நினைக்கும் அவர்களின் எண்ணம் பலிக்காது என்றும் எச்சரித்தார். எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்கள் குறித்துக் கேட்கப்பட்ட போது, “தூங்கி விழித்தவர்கள் பேசுவதைப் போல அவர் பேசி வருகிறார்” என விமர்சித்தார்.
ஆட்சியில் பங்கு கேட்டுச் சில காங்கிரஸ் நிர்வாகிகள் பேசி வருவது குறித்த கேள்விக்கு, “காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமையுடனும், தமிழக முதலமைச்சருடனும் பேசி நல்ல முடிவெடுக்கப்படும்; அதிகாரம் இல்லாதவர்கள் பேசுவதற்குப் பதில் சொல்லத் தேவையில்லை” எனத் தெளிவுபடுத்தினார். மாணவர்கள் வளர்ச்சிப் பாதையில் செல்ல இந்த லேப்டாப் திட்டம் ஒரு மைல்கல் என்று குறிப்பிட்ட அவர், வரும் 2026 தேர்தலுக்குப் பின் மீண்டும் மு.க. ஸ்டாலின் அவர்கள் இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்பது உறுதி எனத் தீர்க்கமாகக் கூறினார்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்: தன்னாட்சி பறிப்பு! மத்திய அரசு மீது சபாநாயகர் அப்பாவு ஆவேசம்!