முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக்-அவுட் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவு தொடரும் நிலை உறுதியாகியுள்ளது.
2022-ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் எ.வ. வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை ஒரு பகுதியாக, எ.வ. வேலுவுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
இதற்கிடையில், உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த எ.வ. வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், லுக்-அவுட் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், ஜூலை 15-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: "எ.வ.வேலுக்கு சிக்கல்! சாலை முறைகேடு வழக்கில் புதிய திருப்பம்... சுப்ரீம் கோர்ட்டை நாடும் தமிழக அரசு!"

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பு நடைபெற்ற விசாரணையில், லுக்-அவுட் நோட்டீஸை முழுமையாக ஆய்வு செய்யாமல் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், அந்த வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், எ.வ. வேலு விசாரணைக்கு ஒத்துழைப்பதாக ஏற்கனவே உறுதியளித்திருப்பதால், கூடுதல் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தது. மேலும், லுக்-அவுட் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட வேண்டிய காரணம் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், எ.வ. வேலு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால நிவாரணம் தொடர்ந்து அமலில் இருக்கும் நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைக்க வேண்டும் என்ற உத்தரவும் தொடர்கிறது.
இதையும் படிங்க: ஜூலை 15ல் நேரில் ஆஜராகணும்!! முறைகேடு வழக்கில் எ.வ.வேலுக்கு சிக்கல்!