எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், முதலமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதலே தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது என்றார்.
இராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 15-ஆம் தேதியும், சிவகங்கை காளையார்கோவிலில் அதற்கு அடுத்த நாளும் நடந்த இரட்டைக்கொலைகள் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். காளையார்கோவில் சம்பவத்தில் ஆள் மாறி கொலை செய்துவிட்டோம் என்று கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கூலிப்படையை ஏவியவர்களை கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

குற்றவாளிகளை காவல்துறை பாதுகாக்கக் கூடாது என்று கொலையானவர்களின் உறவினர்கள் காளையார்கோவில் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, குற்றவாளிகளை கண்டுபிடிக்கவோ வக்கற்று, போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தியிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: நவோதயா பள்ளிகள் வேண்டாம்! சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்ட உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!
காவல்துறையின் இந்த அடக்குமுறையை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த இரட்டைக்கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்றும், இதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், நீதியும் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அன்றும்.. இன்றும்.. என்றும்..! தமிழ்நாட்டை ஆள்வது அண்ணா தான்..! உதயநிதி பெருமிதம்.!