சென்னை: தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரசாரத்தின் முக்கிய களமாக சமூக வலைதளங்கள் மாறியுள்ளன. குறிப்பாக இன்ஸ்டாகிராம் ‘ரீல்ஸ்’, குறும்பட வீடியோக்கள் மற்றும் உள்ளூர் சமூக ஊடகப் பக்கங்கள் வாயிலாக இளம் வாக்காளர்களை சென்றடையும் முயற்சியில் பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மதுராந்தகத்தில் 27 பேரும், தாராபுரத்தில் 22 பேரும் இறுதி வேட்பாளர் பட்டியலில் உள்ளனர். முக்கிய கட்சிகளாக தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், வழக்கமான பொதுக்கூட்டம், வீடு வீடாக பிரசாரம் ஆகியவற்றுடன் டிஜிட்டல் பிரசாரத்துக்கும் கட்சிகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. உள்ளூர் பகுதிகளுக்கென தனி சமூக ஊடகப் பக்கங்கள், பிரசாரக் குழுக்கள் மற்றும் தேர்தல் வியூக மையங்கள் மூலம் வீடியோக்களை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: CM 2031! பதிவெண் கொண்ட டெஸ்லா காரில் திருமாவளவன் பயணம்! கோட் பட விஜய் பாணியில் சூசகம்?
மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனின் பெயரில் வெளியிடப்படும் இன்ஸ்டாகிராம் வீடியோக்களில் இளைஞர்களிடம் ஆதரவு கோருவதுடன், எதிரணியின் அரசியல் செயல்பாடுகளை விமர்சிக்கும் காட்சிகளும் இடம்பெறுகின்றன. சினிமா பின்னணி இசையுடன் தயாரிக்கப்படும் ‘ஸ்லோ மோஷன்’ வீடியோக்களும் கவனம் பெற்றுள்ளன.

அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்துக்கும் சமூக ஊடகப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை மையமாக வைத்து வெளியிடப்படும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
தாராபுரத்திலும் இதே நிலை காணப்படுகிறது. தவெக வேட்பாளர் சத்தியபாமா, திமுக வேட்பாளர் சுகன்யா உள்ளிட்டோர் தங்களுக்கென சமூக ஊடகப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். திரைப்படப் பாடல்கள், வேகமான எடிட்டிங், உள்ளூர் பிரச்னைகள் மற்றும் வேட்பாளர்களின் தனிப்பட்ட பின்னணி ஆகியவை வீடியோக்களில் பயன்படுத்தப்படுகின்றன.
இரு தொகுதிகளிலும் இளம் வாக்காளர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். மதுராந்தகத்தில் 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் 45,948 பேரும், 30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் 46,619 பேரும் உள்ளனர். தாராபுரத்தில் இந்த இரு வயது பிரிவுகளில் முறையே 38,786 மற்றும் 37,924 வாக்காளர்கள் உள்ளனர்.
இதனால், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வாக்குச்சாவடிக்கு முன்பாகவே சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ் யுத்தம்’ களைகட்டியுள்ளது.
இதையும் படிங்க: எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!