சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வந்த அரசு துறை சார்ந்த முக்கிய ஆய்வு கூட்டங்களுக்கு இனி புதிய இடம் ஒதுக்கப்பட உள்ளது. முதல்வர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட உள்ள நிலையில், அரசு துறை ஆய்வு கூட்டங்கள், உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்கள் உள்ளிட்டவை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தின் பாரம்பரியமிக்க கோட்டை கட்டடத்தின் முதல் தளத்தில் தற்போது முதல்வர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தை அருகில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த தளத்தில் ஏற்கனவே கருத்தரங்க கூடம் மற்றும் உணவருந்தும் கூடம் உள்ளிட்ட வசதிகள் இருந்தன.
முதல்வர் தலைமையில் நடைபெறும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்கள், மாவட்ட கலெக்டர்கள் மாநாடு, காவல் துறை அதிகாரிகள் மாநாடு, அனைத்துக் கட்சி கூட்டங்கள் மற்றும் பல்வேறு கருத்துக் கேட்பு கூட்டங்கள் இதுவரை நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நடத்தப்பட்டு வந்தன.
இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய் 'கிரீன் சிக்னல்'... நிறைவேறும் முக்கிய கோரிக்கைகள் என்ன? வெளியான சூப்பர் தகவல்!

தற்போது முதல்வர் அலுவலக மாற்றத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதால், கருத்தரங்க கூடத்தில் இருந்த இருக்கைகள், மேஜைகள், ஒலிபெருக்கி வசதிகள், டிஜிட்டல் திரைகள் உள்ளிட்ட உபகரணங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால், அரசு நிர்வாகத்தின் முக்கிய கூட்டங்களை நடத்துவதற்கு மாற்று இடமாக கலைவாணர் அரங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் வாலாஜா சாலையில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கில் இனி அரசு துறை ஆய்வு கூட்டங்கள் மற்றும் முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் பட்ஜெட் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட் தொடர்பான இறுதிக்கட்ட ஆலோசனை கூட்டம் முதல்வர் தலைமையில் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டமும் புதிய ஏற்பாடுகளின் அடிப்படையில் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
முதல்வர் அலுவலக இடமாற்றம் என்பது நிர்வாக வசதிக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வந்த முக்கிய அரசு நிகழ்வுகளுக்கான இடமாற்றம் நிர்வாக வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி! கோவில் டெண்டர்களில் இனி முழு வெளிப்படைத்தன்மை! அமைச்சர் ரமேஷ் அதிரடி!