டெல்லி: டெல்லியில் ஓட்டு இயந்திர முறைகேட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி தலைமையில் நடந்த பேரணியில் தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்களும் நிர்வாகிகளும் பங்கேற்றனர். அப்போது தமிழகத்தில் திமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ராகுல் காந்தி ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பேரணி முடிந்த அன்று இரவே ராகுல் காந்தி ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். இதனால் அந்த ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் டில்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் தலைமையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி.க்கள் மாணிக் தாகூர், கார்த்தி சிதம்பரம், விஷ்ணுபிரசாத், ராபர்ட் புரூஸ், விஜய் வசந்த் உள்ளிட்ட சிலர் மட்டுமே தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தேர்தல் டூர் கிளம்பும் ராகுல், பிரியங்கா!! தமிழக காங்., நிர்வாகிகள் அதிரடி! தொடரும் புகைச்சல்!
கூட்டம் முடிந்த பிறகு தமிழகத்திலிருந்து வந்த மாநில நிர்வாகிகள் மற்றும் முன்னணி தலைவர்களை கிரிஷ் ஷோடங்கர் தனித்தனியாகச் சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.

காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி, 2006 சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ் ஆதரவால் தான் ஆட்சி நடந்தது. ஆனால் திமுக ஆட்சியில் காங்கிரஸுக்கு எந்தப் பங்கும் வழங்கப்படவில்லை. அதற்கு பரிகாரமாக இம்முறை கூட்டணியில் ஆட்சியில் பங்கு கேட்டு நிபந்தனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
திமுக அதற்கு உடன்படவில்லை என்றால், ஆட்சியில் பங்கு தர தயாராக உள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க வேண்டும் என்று சில எம்.பி.க்களும் பெரும்பாலான நிர்வாகிகளும் கிரிஷ் ஷோடங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கைகள் தமிழகத்தில் 2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் கூட்டணி உத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தகுதியான தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க!! மாவட்ட தலைவர்கள் கோரிக்கை!! ராகுல்காந்தி நிராகரிப்பு!