தமிழக அரசின் நிர்வாக நடைமுறைகளில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய நிலையான வழிகாட்டுதல் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் உயரிய நிர்வாகப் பதவிகளான தலைமைச் செயலாளர் மற்றும் மாநில காவல்துறைத் தலைவர் (DGP) நியமனத்தில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த ஆளுநரின் முன்அனுமதி பெறும் நடைமுறை நீக்கப்பட்டுள்ளது. இனி இந்த நியமனங்களை மாநில அரசு நேரடியாக மேற்கொள்ள முடியும்.
மனித வள மேலாண்மைத் துறை கடந்த ஜூலை 29-ஆம் தேதி வெளியிட்டுள்ள இந்த உத்தரவு, தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் மூலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2022 முதல் இதுவரை வெளியிடப்பட்டிருந்த முந்தைய நிலையான வழிகாட்டுதல் உத்தரவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையின்படி, மாநில நிர்வாகத்தின் முக்கிய முடிவுகளில் முதலமைச்சரின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள், கூடுதல் செயலாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் தொடர்பான நியமனம், பணியிட மாற்றம், பதவி உயர்வு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட முக்கிய கோப்புகள் அனைத்தும் முதலமைச்சரின் நேரடி பரிசீலனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுகவை சும்மா விடப் போறது இல்லை?! கடந்த ஆட்சிகால மணல் குவாரி முறைகேடுகள்! தூசி தட்டும் தவெக அரசு!

குறிப்பாக அகில இந்திய சேவை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது, விளக்கம் கேட்பது, விசாரணை தொடங்குவது மற்றும் இறுதி உத்தரவு பிறப்பிப்பது உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் முதலமைச்சரின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நிதி நிர்வாகத்திலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொடர் செலவினங்களுக்கு ₹2 கோடிக்கும், தொடராச் செலவினங்களுக்கு ₹5 கோடிக்கும் அதிகமான ஒதுக்கீடுகளுக்கு முதலமைச்சரின் நேரடி ஒப்புதல் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிதித் துறைக்கும் பிற துறைகளுக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் இறுதி முடிவுக்காக முதலமைச்சரிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், ஒரு ஹெக்டேருக்கு மேற்பட்ட நில கையகப்படுத்தல் மற்றும் மாநில-மத்திய அரசுகளுக்கு இடையேயான நிலப் பரிமாற்றங்களுக்கு முதலமைச்சர் மற்றும் வருவாய்த் துறை அமைச்சரின் கூட்டு ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநில நிர்வாகத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மேலும் மையப்படுத்தும் இந்த உத்தரவு, நிர்வாக செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முஸ்லிம் கைதிகளுக்கு பரோல்? தமிழக அரசின் புதிய ஆலோசனை பரபரப்பு!