பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்னை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதிகளில் பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்தியதாகக் கூறப்படும் வான்வழி தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 4 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
குனார் மாகாணத்தின் நுர்கல் மாவட்டத்தில் அதிகாலை நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தலிபான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் தெரிவித்துள்ளார். அங்கு ஒரு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் தரப்பு கூறியுள்ளது.
இதனிடையே, பாக்டிகா மாகாணத்தின் பார்மல் மாவட்டத்திலும் இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. இதில் ஒரு கடையும், ஆள் வசிக்காத ஒரு வீடும் சேதமடைந்ததாகவும், அந்தப் பகுதிகளில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட கேரள பெண் Vlogger! தாலிபான்கள் விதித்த கடும் கட்டுப்பாடுகள்! அதிர்ச்சி அனுபவம்!
இந்த தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை. எனினும், பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள், ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ளதாகக் கூறப்படும் தீவிரவாதிகளின் மறைவிடங்களைக் குறிவைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளன.

சில பாகிஸ்தான் தரப்பு தகவல்களில் 28 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை ஆப்கானிஸ்தான் தரப்பு ஏற்கவில்லை.
பாகிஸ்தான் தனது நாட்டில் தொடர்ந்து நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் செயல்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பை தொடர்புபடுத்தி வருகிறது. ஆனால், தலிபான் அரசு இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.
தற்போதைய தாக்குதலுக்கு தலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஆப்கானிஸ்தான் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் உரிய பதிலடி வழங்கப்படும் என எச்சரித்துள்ளது. இதனால் இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே எல்லை மோதல்கள், தீவிரவாத குற்றச்சாட்டுகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், புதிய வான்வழி தாக்குதல் பிராந்திய பாதுகாப்பு சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
இதையும் படிங்க: பாக். அழகு கிரீம்களில் அதிக பாதரசம்.. சிறுநீரக பாதிப்புக்குள்ளான 18 பெண்கள்..!! இந்திய மருத்துவர்கள் வார்னிங்!!