தமிழகத்தில் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்ட உயர்மட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. முதலில் ரூ.5000 வழங்க திட்டமிடப்பட்ட நிலையில், நிதிச் சுமையை கருத்தில் கொண்டு ரூ.3000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
நிதித்துறை அதிகாரிகள் நடத்திய விரிவான ஆய்வில், ரூ.5000 வழங்கினால் அரசுக்கு கடுமையான நிதி இழப்பு ஏற்படும் என்பது தெரியவந்தது. இதனால் முதல்வர் ஸ்டாலின், "ரூ.3000 கொடுத்தால் போதுமா?" என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இந்த வாட்டி மிஸ் ஆகவே கூடாது! கண்ணைக்காட்டிய ஸ்டாலின்! களம் இறங்கிய அதிகாரிகள்!
அதிகாரிகள் ரூ.3000 வழங்கினால் பெரிய நிதி சுமை ஏற்படாது என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகைக்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான 'கிரீன் சிக்னல்' நிதித்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் உயரதிகாரிகள் சிலர் நிதித்துறையுடன் இது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர். பொங்கல் பரிசுத் தொகுப்பு (அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை) உடன் இந்த ரொக்கம் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர மற்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்தப் பரிசு கிடைக்கும் என தெரிகிறது.
விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்த அறிவிப்பு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பொங்கல் பரிசாக ரூ.1000 முதல் ரூ.2500 வரை ரொக்கம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இம்முறை ரூ.3000 என்பது உயர்வாகும்.
தமிழர்களின் அடையாளமாகவும், விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகையாகவும் விளங்கும் பொங்கல் திருநாளை அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பாகக் கொண்டாட இந்தப் பரிசு உதவும் என அரசு எதிர்பார்க்கிறது. பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிட இதுபோன்ற நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜயிடம் செங்கோட்டையன் வைத்த ரிக்வெஸ்ட்! கொங்கு மண்டலத்தில் பலம் காட்ட தவெக வைத்திருக்கும் சஸ்பென்ஸ்!