கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ திட்டத்தின் பெயரை மாற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசின் நலத்திட்டங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்கள் சூட்டுவது தொடர்பாக புதிய அணுகுமுறையை பின்பற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 1999-ம் ஆண்டு பொதுமக்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் நோக்கில் ‘வரும் முன் காப்போம்’ என்ற திட்டத்தை தொடங்கினார். நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
2021-ம் ஆண்டு மு.க. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு இந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டது. 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 5,654 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'குதிரை பேர' வழக்கில் செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்... காவல் நிலையத்தில் கையெழுத்து கட்டாயம்!
பின்னர், ‘வரும் முன் காப்போம்’ திட்டம் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற பெயரில் மாற்றப்பட்டு, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் 1,256 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பொதுமக்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தவெக அரசு ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. திட்டத்தின் மூலம் எத்தனை பேர் பயனடைந்தனர், என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டன, மருத்துவ பரிசோதனைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், திட்டத்தின் பெயரை மாற்றி தொடர்ந்து செயல்படுத்த அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அரசின் முக்கிய திட்டங்களுக்கு முன்னாள் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்தும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, காலை உணவு திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் காமராஜரின் பெயர் சூட்டப்பட்டதைப் போல, இந்த மருத்துவ திட்டத்துக்கும் தவெக கொள்கைகளுடன் தொடர்புடைய முக்கிய தலைவர்களில் ஒருவரின் பெயரை வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், திட்டத்தின் புதிய பெயர் என்ன, எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் இதுவரை முழுமையான தகவல் வெளியிடப்படவில்லை. இந்த பெயர் மாற்ற முடிவு அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தலை குறிவைக்கும் அண்ணாமலை... கட்சி பெயர், கொடி, ரெடி! செப்டம்பரில் பிரம்மாண்ட மாநாடு?