திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி எம்.எல்.ஏ.,வும் தமிழக வெற்றி கழகத்தின் துணை சபாநாயகருமான ரவிசங்கர், தனது வீட்டுக்கு பொதுமக்கள் நேரடியாக வர வேண்டாம் என அறிவுறுத்தும் வகையில் பேனர் வைத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் துறையூர் (தனி) தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட ரவிசங்கர், 66,263 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து சட்டப்பேரவை துணை சபாநாயகராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம், சக்தி நகரில் ரவிசங்கரின் வீடு உள்ளது. அதே பகுதியில் கட்சி அலுவலகமும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனரில், தன்னை நேரில் சந்திக்க விரும்புவோர் துறையூரில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகம் அல்லது மண்ணச்சநல்லூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஒருமையில் விளாசிய மாவட்ட செயலாளர்... மன உளைச்சலில் தவெக நிர்வாகி தற்கொலை... மனைவி கண்ணீர் புகார்...!

இதனால், ரவிசங்கரை சந்திக்க விரும்புபவர்கள் இனிமேல் அவரது வீட்டுக்கு நேரடியாக வர வேண்டாம் என்பதே இந்த அறிவிப்பின் நோக்கமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது பொதுமக்கள் தன்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என அவர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இதுபோன்ற அறிவிப்பு வெளியாகியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கிடையே, ரவிசங்கரின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை தொடர்பாக சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், அந்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.
தவெக வட்டாரத்தில் கூறப்படுவதாவது, தனிப்பட்ட குடும்ப விவகாரங்கள் காரணமாக தேவையற்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கவே, வீட்டுக்கு நேரடியாக வராமல் கட்சி அலுவலகம் அல்லது எம்.எல்.ஏ., அலுவலகத்தில் சந்திக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கலாம் என்பதாகும்.
எனினும், பேனர் வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ரவிசங்கர் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. இதனால், பேனரின் பின்னணி என்ன என்பது தொடர்பாக தற்போது பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: கனிம வளங்களை கொள்ளையடித்த தவெக பிரமுகருக்கு ஆப்பு... ரூ.7.5 கோடிக்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்...!