திருச்சி: தமிழக முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாளை (ஜூன் 1) திருச்சி வருகை தருகிறார். இதன்முன்னதாக பிரமாண்ட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். திருச்சி கிழக்கு தொகுதியில் 91,381 ஓட்டுகள் பெற்று 27,416 ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜை தோற்கடித்தார்.
முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அவர் திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சிறப்பு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துறைமுகமா? திருச்சி கிழக்கா? மு.க.ஸ்டாலின் களமிறங்குவது எங்கே!? திமுக தீவிரம்!
நாளை மாலை 4 மணிக்கு திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் இந்த நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பல்வேறு பகுதிகளில் இருந்தும் 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்களும், த.வெ.க. தொண்டர்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கும் பணிகள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன் கூறுகையில், “முதலமைச்சர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வருகை தருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்துக்கு வருவார். கூட்டம் முடிந்ததும் மீண்டும் தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். முதல்வர் வரும் போது அவரது வாகனத்தை யாரும் பின்தொடரக் கூடாது” என்று தெரிவித்தார்.
திருச்சி கிழக்கு தொகுதி மக்களின் அன்பான ஆதரவால் வெற்றி பெற்ற விஜய், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இந்த நிகழ்ச்சி த.வெ.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் வருகையையொட்டி திருச்சி நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: விஜயை வீழ்த்த களமிறக்கப்படும் உதயநிதி ஸ்டாலினின் வலதுகரம்!! திமுக பிரம்மாஸ்திரம்! திருச்சி கிழக்கில் அதிரடி!