தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தி.மு.க.வின் பலமான கூட்டணியை எதிர்கொள்ள அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி இன்று இறுதி வடிவம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாமக உடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இன்றைய பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழக சட்டமன்றத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தின் அரசியல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. ஆளும் தி.மு.க. தனது பலமான கூட்டணிக் கட்சிகளுடன் களமிறங்கத் தயாராக உள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தக் கூட்டணியில் பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் நிலையில், மேலும் சில முக்கியக் கட்சிகளை இணைக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சரும் பா.ஜனதா மேலிடப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று (புதன்கிழமை) சென்னை வருகிறார். அவர் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்துக் கூட்டணி குறித்து இறுதிப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுடனும் இன்று பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த இரு கட்சிகளும் கூட்டணியில் இணைவது உறுதி செய்யப்பட்டால், வரும் 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் இவர்கள் ஒரே மேடையில் தோன்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "234 தொகுதியிலும் நானே நிக்கிறேன்.. யாரும் குழம்பாதீங்க!" கூட்டணி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர்!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பியூஷ் கோயல் முன்னிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தங்களும் இன்று கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “வெற்றி ஒன்றே இலக்கு” என்ற நோக்கில் சிதறிக் கிடக்கும் வாக்கு வங்கிகளை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள இந்த முயற்சி, தி.மு.க. கூட்டணிக்குக் கடும் சவாலாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் களத்தில் இருப்பதால், இந்த ‘மெகா கூட்டணி’ தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: த.வெ.க. தேர்தல் பிரசாரக்குழு நாளை ஆலோசனை: 234 தொகுதிகளுக்கும் விஜய் புதிய வியூகம்!