தவெக அரசு பொறுப்பேற்ற முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவையில் ஆளுநர் முழுவதுமாக தமிழக அரசு கொடுத்த உரையை படித்து முடித்தார். இதையடுத்து 19, 22, 23 ஆகிய நாட்களுக்கு செயல்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் , அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பிறகு தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் 19ஆம் தேதி முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசி வருகிறார்கள். இன்றுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைய உள்ள நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் இன்று உரையாற்ற உள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆரம்பத்தின் போது மேகதாது அணைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறிய திருத்தத்தை உடனடியாக முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். இதற்கு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த பிரச்சனையை இடதுசாரிகள் இன்று சட்டப்பேரவையில் கிளப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முதலமைச்சர் விஜய் என்ன விளக்கம் அளிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பெண்கள் தமிழ்நாட்டின் பொக்கிஷம்..! டென்ஷன்-ஆன அமைச்சர் ராஜ்மோகன்..!!
அதேபோல் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்தே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாகவும், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மற்றொருபுறம் பயிர்க்கடன் தள்ளுபடி, மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படாதது போன்ற காரணங்களால் விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
குறிப்பாக பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமிழக அரசை எதிர்த்து தினந்தோறும் விதவிதமாக விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மற்றொருபுறம் தற்போது 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியாருக்கு தாரை வார்க்க டெண்டர் விடப்பட்டுள்ளதால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் குவித்துள்ளனர்.
அனைத்தையும் விட மின்வெட்டு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. “அண்ணன் பவருக்கு வந்ததில் இருந்தே தமிழகத்தில் பவர் போச்சு” என தவெகவினரே பேசுகின்றனர் என சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் தவெக ஆட்சியில் குதிரை பேரம் நடந்துள்ளதாகவும், 3 சீட்டர் சோஃபா, 5 சீட்டர் சோஃபாவாக மாறிவிட்டது என அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவலை சுட்டிக்காட்டியும் பேசியிருந்தார்.
சட்டப்பேரவையில் அடுத்தடுத்து எதிர்க்கட்சிகள் தவெக அரசு மீது வைத்து வரும் குற்றச்சாட்டுக்களுக்கு இன்றூ முதலமைச்சர் விஜய் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “தில் இருந்தால் தொகுதிக்குள்ள கால் வை... கொந்தளிப்புடன் தயாராக இருந்த அதிமுகவினர் ... ஓட்டம் பிடித்த மரகதம் குமரவேல்...!