நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. கட்சியின் கொடி, சின்னம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் சட்டப்பூர்வ தடைகள் கட்சியின் முன்னேற்றத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன.

இந்நிலையில் தவெக கட்சிக் கொடியில் உள்ள நிறங்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பின் நிறுவனத் தலைவர் ஜி.பி. பச்சையப்பன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 4 சுங்கச்சாவடிகளில் கட்டண நிலுவை தொடர்பான வழக்கு.. இன்று மீண்டும் விசாரிக்கிறது ஐகோர்ட்..!
தவெக கட்சியின் கொடியில் சிவப்பு, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிறங்கள் தங்கள் அமைப்பின் பதிவு செய்யப்பட்ட கொடியின் நிறங்களுடன் ஒத்துப்போவதாகவும், இதனால் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பச்சையப்பன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனை எதிர்த்து, தவெக கட்சியின் கொடியில் உள்ள நிறங்களை நீக்க உத்தரவிடக் கோரியுள்ளார்.
முன்னதாக, பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தவெக கொடியில் உள்ள இரட்டை யானை சின்னம் தங்கள் கட்சியின் ஒற்றை யானை சின்னத்துடன் ஒத்திருப்பதாகக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தது. ஆனால், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இரு சின்னங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளதாக விளக்கமளித்து, அந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

இதுதவிர, தவெகவின் மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி பெறுவதில் காவல்துறை மற்றும் ஆளும் திமுக அரசின் அடக்குமுறைகளை எதிர்கொள்வதாக கட்சி ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். உதாரணமாக, போராட்டங்களுக்கு அனுமதி பெறுவதற்கு நீதிமன்ற உத்தரவுகளை நாட வேண்டிய நிலை உள்ளது. மேலும், உறுப்பினர் சேர்க்கை, மாவட்ட மற்றும் மண்டல மாநாடுகள், மக்கள் சந்திப்பு போன்ற தவெகவின் திட்டமிட்ட செயல்பாடுகள் அரசியல் எதிர்ப்புகளால் தடைபடுவதாக கூறப்படுகிறது.
இதனை பிரச்சனைகள் இருந்தபோதிலும், தற்போது இந்தப் புதிய வழக்கு தவெக கட்சிக்கு மற்றொரு சவாலாக அமைந்துள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தவெக, 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய்யை அறிவித்து, தனித்து அல்லது கூட்டணியுடன் போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு கட்சியின் முன்னேற்றத்தை பாதிக்குமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: விநாயகர், வேளாங்கண்ணி மாதா, மெக்கா படங்கள்... யாகத்துடன் தொடங்கியது தவெக 2வது மாநாடு பூஜை...!