தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உருவெடுத்துள்ள போதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டாததால் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியுடன் (பாமக) தவெக ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கப் பாமக-வின் ஆதரவு அவசியமாக இருக்கும் நிலையில், அக்கட்சி சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாமக தரப்பிலிருந்து சௌமியா அன்புமணியைத் துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்துத் தனது அதிகாரப்பூர்வமான முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. 34.92% வாக்கு விழுக்காட்டுடன் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள தவெக, இக்கோரிக்கையை ஏற்குமா அல்லது வேறு ஏதேனும் சமரசத் திட்டங்களை முன்வைக்குமா என்பது இன்னும் முடிவாகவில்லை.
இதையும் படிங்க: தவெக எம்எல்ஏக்களுடன் விஜய் இன்று முக்கிய ஆலோசனை: அமைச்சரவை பட்டியல் தயாரிப்பு தீவிரம்!
இந்த அரசியல் காய்நகர்த்தல்களுக்கு இடையே, தமிழகப் பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று சென்னை வர உள்ளார். எந்த ஒரு கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லாத நிலையில், 108 இடங்களை வென்றுள்ள விஜய்யை ஆட்சி அமைக்க அவர் அழைப்பாரா அல்லது பாமக-வின் ஆதரவுக் கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பாரா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி மற்றும் பல அமைச்சர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணி ஆட்சி அமையுமா அல்லது விஜய் தலைமையிலான தனி ஆட்சி அமையுமா என்பது இன்னும் சில தினங்களில் உறுதியாகிவிடும்.
இதையும் படிங்க: சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!