2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி வைத்து தொகுதி பங்கீடு ஆகியவற்றை முடிவு செய்துள்ளனர். அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி சமீபத்தில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தது. அதில் பாஜகவிற்கு 28 தொகுதிகள் ஒதுக்கின. நீண்ட நாட்களாக எப்போது வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் 27 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியானது.
இதில் அண்ணாமலை பெயர் இடம் பெறாதது தமிழக பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிட ஆர்வமாக இருந்த நிலையில், அதனை வானதி சீனிவாசனுக்கு ஒதுக்கியது மட்டுமின்றி, கோவை மாவட்டத்தில் போட்டியிட விரும்பிய அண்ணாமலைக்கான தொகுதியை தமிழக பாஜக தலைமை கேட்டு பெறவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இதனை இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையும் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழக பாஜக தனது பெயரை வேட்பாளர் பட்டியலுக்கு பரிந்துரிக்கவில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவே பரிந்துரை செய்யாத போது தலைமை எப்படி அறிவிக்கும் என கேள்வி எழுப்பினார். பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை மே நான்காம் தேதிக்கு பிறகு கூறுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிடாதது ஏன்.? தமிழக பாஜகவை கைக்காட்டிய அண்ணாமலை..!! பரபரப்பு பேட்டி..!
இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அண்ணா திமுகவிற்கு சாதகமாக நைனார் நாகேந்திரன் செயல்படுவதால், அண்ணாமலைக்கு சீட்டு இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தனி தொகுதி தேர்தல் அலுவலகத்தை சத்தியமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் திறந்து வைத்து, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறுகையில், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் அண்ணா திமுகவிற்கு சாதகமாக செயல்படுவதால், அண்ணாமலைக்கு சீட் கொடுக்கப்படவில்லை. பாரதிய ஜனதா கட்சிக்கு 11 சதவீத சதவீதமாக இருந்த வாக்கு வங்கி, தற்போது 5 சதவீதமாக குறைந்துள்ளது.
அனைத்து அரசியல் தலைவர்களையும் தரக்குறைவாக பேசி வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. பணம் கட்டிய யாருக்கும் சீட் தராமல் போனதால், திருப்பதிக்கு போய் நாமத்தை கையில் கொடுத்து விட்டார்.
அதிமுகவின் மாவட்ட செயலாளர் ஏ.கே. செல்வராஜ் என்னை தெருவில் நிறுத்துவதாக கூறினார். தற்போது அவருக்கு சீட் மறுக்கப்பட்டு, அவர் தெருவிலே நிற்கிறார்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டதா..?? கட்சியில் பாரபட்சம் இல்லை - தமிழிசை சவுந்தரராஜன் பளீச் பதில்..!!