இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க அனுமதிக்காதது அரசியல் களத்தில் பல கேள்வி கணைகளை எழுப்பியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் ஒரு காலத்தில் அதிமுக என்கிற இரும்பு கோட்டையில் மூன்று முறை முதல்வராகவும் ஜெயலலிதாவின் விசுவாசியாகவும் பலம் பொருந்தியவராகவும் வலம் வந்தார். இன்று அவரது அரசியல் வானம் கார்மேகங்கள் சூழ்ந்து எந்த திசையில் இருந்து இடி இறங்கும் என்ற நிலையில் உள்ளது. அதற்கு காரணம் பாஜகவிற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக விதித்துள்ள நிபந்தனை என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தில் தனது கால்தடத்தை வலுவாக பதிக்க நினைக்கும் பாஜக அதற்கான எல்லா வழிகளையும் ஆராய்ந்து செயல்படுத்தி வருகிறது. தற்போதைக்கு தமிழகத்தில் திமுகவிற்கு எதிராக அதிமுக தலைமையில் கூட்டணி அமைப்பதே பாஜகவிற்கு சாதகமான ஒன்றாக இருக்கும். அதனால் அதிமுகவின் நிபந்தனைகளை பரிசீலிக்க வேண்டிய இடத்தில் பாஜக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதிமுகவின் மிக முக்கியமான நிபந்தனை. ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் இணைக்க கூடாது. அதற்கு பாஜகவும் இசைவு தெரிவித்திருப்பதையே தமிழக பயணத்தின் போது ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்காமல் பிரதமர் மோடி சென்றதை உணர்த்துகிறது. பிரதமர் மோடியின் சந்திப்பு மறுக்கப்பட்டதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவுகள் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஓங்கி சாத்தப்பட்டிருப்பதாகவே எண்ண தோன்றுகிறது. பல ஆண்டுகளாக பாஜகவை தொடர்ந்து ஆதரித்து வரும் ஓபிஎஸை அந்த கட்சி கைவிட்டு விட்டதாக அவரது ஆதரவாளர்கள் கவலைப்படுகின்றனர்.
எந்த கட்சியின் ஆதரவும் இல்லாமல் அரசியலில் தனித்து நிற்கும் அவர் வலுவான நிலைப்பாட்டை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். தற்போது அவருக்கு சாத்தியமான ஒரே வாய்ப்பு தனிக்கட்சி தொடங்கி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது தான். விஜய் கூட ஓபிஎஸ் கை கோக்குறதுக்கான முதற்கட்ட வேலைகளும் சந்திப்புகளும் தொடங்கிடுச்சுன்னு சொல்றாங்க திரும்பவும் அதிமுகவுக்குள்ள ஓபிஎஸ் போக வாய்ப்பில்லைன்னு சொல்லப்படுது.
இதையும் படிங்க: என்னப்பா நடக்குது அங்க? முதன்முறையாக மத்திய அரசுக்கு எதிராக போர் கொடி தூக்கிய ஓபிஎஸ்..!
கடந்த சில நாட்களாவே ஓபிஎஸ் விஜய் கேம்போட ரொம்ப நெருக்கமா இருக்கறதா சொல்றாங்க. விஜய்க்கு நெருக்கமா இருக்கிற ஒரு நண்பர் ஓபிஎஸ் தரப்பை சந்திச்சு பேசி இருக்காரு. அந்த சந்திப்பு சுமூகமா இருந்ததா சொல்றாங்க. ஓபிஎஸும் விஜய் கூட போறதிலயோ, அவர் கூட சேர்ந்து தேர்தலை சந்திக்கிறதுலயோ எந்த சிக்கலும் இல்லைன்னு ரெண்டு தரப்பும் தெளிவுபடுத்தி இருக்கான். இதுக்கப்புறம்தான் விஜயோட மதுரை மாநாட்டு இடத்துக்கு சில சிக்கல் இருந்ததாவும் அதை ஓபிஎஸ் தீர்த்து வச்சதாவும் சொல்றாங்க. இதோட வெளிப்பாடுதான் ஓபிஎஸ் அணிக்கு ஆலோசகரா இருக்கிற பன்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகாவும் வேணாம் பாஜகவும் வேணாம். விஜய் பக்கம் போறதுல தவறு இல்லைன்னு சொல்லியிருக்காராம். தர்ம யுத்த தலைவர் தவெக தலைவரோட கை கோக்குறது நிச்சயம்ங்கிறாங்க. இதுதொடர்பான முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியுள்ளது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... வேதனையைக் கொட்டித்தீர்த்த நயினார் நாகேந்திரன்...!