ராணுவம் பற்றி விஷமமாகப் பேசுவோர் மீது தமிழக காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக எல். முருகன் சமூக வளைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கொன்று குவித்த தீவிரவாதிகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. பஹல்காமில் உயிரிழந்த 26 பேரின் குடும்பத்துக்கு பின்னால் 140 கோடி இந்தியர்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம் என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டிய தருணம் இது. தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தீவிரவாதத்தின் ஆணி வேராக செயல்படும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டியே ஆக வேண்டும். அரசியல் பேதங்களை கடந்து ஒட்டுமொத்த தமிழகமும் தீவிரவாதத்தை வேரறுப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அந்த வகையில் சட்டத்துக்கு புறம்பாக தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த நபர்களை உடனடியாக தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். தமிழக முதல்வர் இவ்விவகாரத்தில் துரிதமாக செயல்பட வேண்டும்.

அதேபோல் நமது ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பு பற்றியும் விஷமத்தனமான வதந்திகளைப் பரப்பும் நபர்கள் மீதும் தமிழக காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்திற்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்களை சமூகம் தனிமைப்படுத்த வேண்டும்” என்று எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் தோற்று போன ஒரு நாடு.. பாக்.கை டாராக கிழித்து தொங்கவிட்ட ஓவைசி!
இதையும் படிங்க: இந்தியா எங்களை தாக்கினால் அணு ஆயுதங்களை எடுப்போம்.. பீதியில் பாகிஸ்தான் தூதர் பிதற்றல்.!!