அமெரிக்காவில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான நாடாளுமன்ற அதிகாரச் சமநிலையைத் தீர்மானிக்கவுள்ள இடைக்காலத் தேர்தலில், பல மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவடையத் தொடங்கியுள்ளது. ஓஹியோ, ஜார்ஜியா, வட கரோலினா உள்ளிட்ட மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், குடியரசுக் கட்சியினர் வசமிருந்த பல தொகுதிகளில் ஜனநாயகக் கட்சியினர் முன்னிலை வகிப்பதாக ஆரம்பகட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தேர்தல் முடிவுகள், அதிபர் டொனால்ட் டிரம்பின் அரசியல் செல்வாக்கையும், அவரது நிர்வாகத்தின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான செயல்பாடுகளையும் தீர்மானிக்கும் முக்கியத் தேர்தலாகக் கருதப்படுகிறது. பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் சில இடங்களை இழக்கக்கூடும் என்ற கவலை அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. இதனால், ஜனநாயகக் கட்சியினருக்கு இந்தத் தேர்தல் சாதகமாக அமையக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜார்ஜியா மாநிலத்தில் பதிவான வாக்குகள், செனட் மற்றும் ஆளுநர் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியினருக்கு எதிரான போட்டியில் தங்களுக்கு வெற்றியைத் தேடித்தருமா என்ற கவலை குடியரசுக் கட்சியினரிடையே நிலவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இதையும் படிங்க: மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!
பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றினால், டிரம்பின் அதிபர் பதவி பறிக்கப்படாது. ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் கட்சிக்கான அதிகாரம் குறைந்துவிடும். இதனால், புதிய சட்டங்கள், மசோதாக்களை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்படும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த அதிகாரிகளை நியமிக்கும் டிரம்பின் அதிகாரம் பாதிக்கப்படலாம்.
அமெரிக்காவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதும், ஈரானுக்கு எதிரான போர் தொடர்பான அதிருப்தியும் குடியரசுக் கட்சியினருக்கு எதிரான மனநிலையை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தத் தேர்தல் முடிவுகள் டிரம்பின் ஜனாதிபதி பதவிக்காலம் குறித்த மக்களின் மதிப்பீடாகவும் பார்க்கப்படுகின்றன.
எத்தனை இடங்களுக்கு தேர்தல்?
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையின் 100 இடங்களில் 35 இடங்களுக்கும், 36 மாநிலங்களின் ஆளுநர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. குடியரசுக் கட்சியினரிடமிருந்து பிரதிநிதிகள் சபையை கைப்பற்ற ஜனநாயகக் கட்சியினருக்கு மூன்று இடங்கள் தேவைப்படுகின்றன. செனட் சபையில் பெரும்பான்மையைப் பெற நிகரமாக நான்கு இடங்களை கைப்பற்ற வேண்டும்.
கென்டக்கி மற்றும் இந்தியானா மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவடையத் தொடங்கிய நிலையில், பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரீஸ், “நாடு ஒரு பெரிய அரசியல் மாற்றத்தின் விளிம்பில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சியினர் மீண்டும் கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், செனட் சபையில் ஜனநாயகக் கட்சியினருக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. தற்போது குடியரசுக் கட்சியினர் 53–47 என்ற பெரும்பான்மையைக் கொண்டுள்ளனர். இருப்பினும், கேன்சஸ், டெக்சாஸ், அயோவா, ஓஹியோ, அலாஸ்கா உள்ளிட்ட குடியரசுக் கட்சியின் பாரம்பரிய ஆதரவு மாநிலங்களிலும் போட்டி கடுமையாகியுள்ளது.
அதேநேரத்தில், ஜனநாயகக் கட்சியினர் தங்களிடம் உள்ள போட்டி நிறைந்த தொகுதிகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய சவாலும் உள்ளது. மிச்சிகனில் ஏற்பட்ட கட்சிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹேலி ஸ்டீவன்ஸ், அக்கட்சியின் வேட்பாளர் அப்துல் எல்-சயீத்துக்கு பதிலாக குடியரசுக் கட்சியின் மைக் ரோஜர்ஸை ஆதரித்துள்ளார்.
இறுதிக்கட்ட கணிப்பின்படி, பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினர் 241 இடங்களையும், குடியரசுக் கட்சியினர் 194 இடங்களையும் பெறலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. செனட் சபையில் ஜனநாயகக் கட்சியினர் 52–48 என்ற குறுகிய பெரும்பான்மையைப் பெற வாய்ப்புள்ளதாகவும் அந்தக் கணிப்பு தெரிவிக்கிறது.
ஜனநாயக் கட்சி முன்னிலை:
ஜார்ஜியாவில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜான் ஓசாஃப், குடியரசுக் கட்சியின் மைக் காலின்ஸைத் தோற்கடித்து மீண்டும் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலில் டிரம்ப் ஜார்ஜியாவில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்ததால், இந்த மாநிலத்தில் குடியரசுக் கட்சியினர் நம்பிக்கையுடன் இருந்தனர். இந்நிலையில், ஓசாஃப் பெற்ற வெற்றி அக்கட்சிக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
நியூ ஹாம்ப்ஷயரில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிறிஸ் பாப்பாஸ், ஜான் இ. சுனுனுவைத் தோற்கடித்து செனட் இடத்தைத் தக்கவைத்துள்ளார். வட கரோலினாவில் முன்னாள் ஆளுநர் ராய் கூப்பர், குடியரசுக் கட்சியின் மைக்கேல் வாட்லியைத் தோற்கடித்து செனட் இடத்தைக் கைப்பற்றியுள்ளார். குடியரசுக் கட்சியினர் வசமுள்ள குறைந்தது நான்கு இடங்களைக் கைப்பற்ற ஜனநாயகக் கட்சியினர் முயன்று வரும் நிலையில், இந்த வெற்றி அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
மேலும், டெலாவேரில் கிறிஸ் கூன்ஸ், நியூ ஜெர்சியில் கோரி புக்கர், இல்லினாய்ஸில் ஜூலியானா ஸ்ட்ராட்டன், மாசசூசெட்ஸில் எட்வர்ட் மார்க்கி, ரோட் தீவில் ஜான் ரீட் ஆகிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் மீண்டும் செனட் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் யார் பெரும்பான்மையைப் பெறுகிறார்கள் என்பதே டிரம்ப் நிர்வாகத்தின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான அரசியல் சூழலைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக இருக்கும்.
இதையும் படிங்க: கேள்வி கேட்டதால் ஆத்திரமா? பத்திரிகையாளரை உருவ கேலி செய்த டிரம்ப்!! கிளம்பிய சர்ச்சை!!