மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பெரிதும் பாதித்துள்ளதாகவும், அதன் விளைவாகவே அவர் அரசு விழாக்களில் அரசியல் பேசிப் புலம்பி வருவதாகவும் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் அமித்ஷாவைக் கடுமையாக விமரிசித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வானதி சீனிவாசன் இன்று (ஜனவரி 7) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "அமித்ஷா வருகை முதலமைச்சரை நிலைகுலையச் செய்துள்ளது; இதற்கே இப்படி என்றால், அடுத்த முறை அமித்ஷா தமிழகம் வரும்போது அதிமுக - பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்போது திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது பேச்சில் திமுக அரசு சுமார் 5,000 கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தியதாகக் கூறியதைக் கேலி செய்துள்ள வானதி சீனிவாசன், "கோயில் கும்பாபிஷேகங்களுக்கு திமுக அரசோ அல்லது முதலமைச்சரோ நிதி வழங்கவில்லை; அவை அனைத்தும் முழுக்க முழுக்க இந்து பக்தர்களின் நன்கொடை மற்றும் காணிக்கை மூலமே நடைபெறுகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார். மாறாக, கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறைக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலைதான் உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒன்றிணையுமா அதிமுக? அமித்ஷாவுடன் இன்று எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை மோசடி விவகாரத்தை அமித்ஷா அம்பலப்படுத்தியதைக் குறிப்பிட்ட வானதி, "பக்தர்கள் வழங்கிய 312 சவரன் தங்கம் மாயமானது ஐஐடி ஆய்வறிக்கையில் உறுதியாகியுள்ளது; இப்படி கோயில் பணம் கொள்ளை போவதைத்தான் அமித்ஷா சுட்டிக்காட்டினார்" என்றார். மேலும், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவைத் தடுத்த திமுக அரசின் போக்கைச் சுட்டிக்காட்டிய அவர், இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லாத முதலமைச்சர் மதச்சார்பின்மை பற்றிப் பேசுவது ஒரு "கேலிக்கூத்து" என்றும், இனி வரும் நாட்களில் திமுகவின் கதறல் இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் தனது அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: “திமுக கொடுத்தது பொய் வாக்குறுதி.. மோடி கொடுத்தது 11 லட்சம் கோடி!” புள்ளிவிவரங்களுடன் திமுக-வை விளாசிய அமித்ஷா!