தமிழகத்தில் விஜய் ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்துவிட்டார் என்றும், திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் நீண்டகால விருப்பம் என்றும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தரவுப் பிரிவுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தபோது தமிழக அரசியல் களம் மற்றும் காங்கிரஸ் - த.வெ.க உறவு குறித்த பல்வேறு கேள்விகளுக்குத் தனது பாணியில் பதிலளித்தார். குறிப்பாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயைச் சந்தித்தது குறித்த கேள்விக்கு, “விஜய் ஒரு சக்திதான்; அதை யாரும் மறுக்க முடியாது. அவரை மக்கள் நடிகராகப் பார்க்க வரவில்லை, ஒரு அரசியல்வாதியாகத்தான் பார்க்க வருகிறார்கள்” எனப் புகழ்ந்து தள்ளினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பிரவீன் சக்கரவர்த்தி பேசுகையில், "தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த 60 ஆண்டுகளாகப் பலவீனமாகவே இருந்து வருகிறது; அதனைப் பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது" என உருக்கமாகத் தெரிவித்தார். "அதிகாரத்தில் பங்கு, கூடுதல் இடங்கள் மற்றும் ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் நியாயமான கோரிக்கையாக உள்ளது; எங்களுடையது ஜனநாயகக் கட்சி என்பதால் யார் வேண்டுமானாலும் கோரிக்கை வைக்கலாம்" என்றார். கூட்டணி குறித்து மேலிடம் தான் முடிவு எடுக்கும் என்று குறிப்பிட்ட அவர், அதே வேளையில் "ஊட்டி விடும் கையை யாராவது கிள்ளி விடுவார்களா?" எனக் கேள்வி எழுப்பி திமுக-காங்கிரஸ் உறவு குறித்த ஒரு நுட்பமான விமர்சனத்தையும் முன்வைத்தார்.
இதையும் படிங்க: “பள்ளிகள் இன்று திறப்பு; போராட்டக் களத்தில் ஆசிரியர்கள்!” மௌனம் கலைத்து ஹாட்ரிக் அடிப்பாரா முதல்வர் ஸ்டாலின்!
விஜய் உடனான சந்திப்பு குறித்துத் தொடர்ந்து கேட்கப்பட்ட போது, "நான் சினிமாவில் இல்லை, அதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்; விஜயைச் சந்தித்ததை ஏன் இவ்வளவு பெரிதாகப் பார்க்கிறீர்கள்?" என வினவினார். "டெல்லியில் நான் பலரையும் சந்திக்கிறேன்; பிரவீன் சக்கரவர்த்திக்குக் காங்கிரஸ் மட்டும்தான் அடையாளமா? வேறு அடையாளங்கள் இல்லையா? தனிப்பட்ட முறையில் இரு நபர்கள் சந்திக்கக் கூடாதா?" என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். விஜய்க்கு மக்களிடையே இருக்கும் வரவேற்பு ஓட்டாக மாறுமா எனப் பலரும் கேட்பதாகக் குறிப்பிட்ட அவர், விஜய் ஏற்கனவே ஒரு அரசியல் சக்தியாகத் தமிழ்நாட்டில் நிலைபெற்றுவிட்டார் என்பதைத் தனது பேட்டியில் அழுத்தமாகப் பதிவு செய்தார்.
இதையும் படிங்க: "இனிமே தனி ரூட் இல்ல, கூட்டணி ஆட்சி தான்!" - 2026 தேர்தலுக்கு ஸ்கெட்ச் போட்ட திலகபாமா!