தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தியில் கடந்த 21ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட இம்மாநாடு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

500-600 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடல் விழாக்கோலம் பூண்டிருந்தது. 1.5 லட்சம் இருக்கைகள், 70 எல்.இ.டி. திரைகள், 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், 8,500 மீட்டர் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம், 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் லாரிகள், 400 மருத்துவக் குழுக்கள், 45 ஆம்புலன்ஸ்கள் மற்றும் ட்ரோன் மூலம் மருந்து விநியோகம் என பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதையும் படிங்க: விஜய் இன்னும் அரசியலில் வளரவில்லை.. ஒரே போடாக போட்ட சரத்குமார்..!!
மாநாடு மாலை 3 மணிக்கு தொடங்கி, தவெக தலைவர் விஜய் 300 மீட்டர் நடைமேடையில் "ரேம்ப் வாக்" செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். 100 அடி கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியேற்றப்பட்டு, கொள்கைப் பாடல், தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. விஜய்யின் 30 நிமிட உரையில், மத்தியில் ஆளும் பாஜகவை கொள்கை எதிரியாகவும், தமிழகத்தில் ஆளும் திமுகவை அரசியல் எதிரியாகவும் அறிவித்தார். 2026 தேர்தல் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேயான போட்டியாக இருக்கும் என உறுதியளித்தார்.
இதனிடையே மாநாட்டிற்காக, மாநாட்டு திடலில் சுமார் 100 அடி உயர கொடிக்கம்பம் நடும் பணி ஆகஸ்ட் 20 அன்று நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக கொடிக்கம்பம் சரிந்து விழுந்து அருகே நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா கார் ஒன்று கடுமையாக சேதமடைந்தது. இச்சம்பவம் மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
30 டன் எடையைத் தாங்கக்கூடிய ராட்சத கிரேன் மூலம் கொடிக்கம்பத்தை நிறுவ முயற்சிக்கப்பட்டபோது, கிரேனின் பெல்ட் அறுந்ததால் கம்பம் கீழே விழுந்து இரண்டாக உடைந்தது. இதனால் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் முற்றிலும் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக, காரில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் கம்பம் நடப்பட்டதாகவும், போல்ட்கள் சரியாகப் பொருத்தப்படாததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. விபத்தைத் தொடர்ந்து, மாற்று கொடிக்கம்பம் நடப்பட்டு மாநாடு திட்டமிட்டபடி நடைபெற்றது. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.

சேதமடைந்த கார், தவெக நிர்வாகியான ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது. இதனால், கார் உரிமையாளர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வைரலானது. இந்தச் சம்பவத்தை அடுத்து, தவெக தலைவர் விஜய், சேதமடைந்த காருக்கு பதிலாக அதே நிறுவனத்தின் புதிய இன்னோவா கார் வாங்கித்தரப்படும் என உறுதியளித்துள்ளார். இது அவரது பொறுப்புணர்வை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அறியாமையில் பேசுகிறார் விஜய்.. உடனடியாக ரியாக்ட் செய்த எடப்பாடி பழனிசாமி..!!