நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையில் தற்போது மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அவரது மனைவி சங்கீதா சோர்நலிங்கம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார். இது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விஜய் - சங்கீதா தம்பதி 1999-ல் திருமணம் செய்துகொண்டவர்கள்.
கிட்டத்தட்ட 27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு இப்படியொரு முடிவுக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால், விஜய் எப்போதும் தனது குடும்பத்தை மிகவும் பாதுகாப்பாகவும், தனியுரிமையுடனும் வைத்திருந்தவர். பொதுவெளியில் அவர்களது திருமண வாழ்க்கை பற்றி எந்த சர்ச்சையும் எழவில்லை. அதனால்தான் இந்த மனு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சங்கீதா தாக்கல் செய்த மனுவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, ஏற்கனவே வீட்டில் இருந்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில், இப்போது சட்டரீதியாகவே பிரிவினைக்கு முயல்கிறார். மனுவில் மிக முக்கியமான குற்றச்சாட்டாக, விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும், 2021 ஏப்ரல் மாதம் இதை அறிந்த பிறகு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது விஜய் அந்த உறவை நிறுத்துவதாக உறுதி அளித்த போதிலும், அது தொடர்ந்ததாகவும், அதனால் தனக்கு தீவிரமான மனவேதனை ஏற்பட்டதாகவும் சங்கீதா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக மூழ்கும் கப்பல்... இதுல OPS வேற..! தவெக அருண்ராஜ் விமர்சனம்.!!

மேலும், விஜய் தன்னை உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் புறக்கணித்ததாகவும், திருமண உறவில் ஈடுபட மறுத்ததாகவும், சமூக மற்றும் தொழில்முறை வட்டாரத்தில் தன்னை விலக்கி வைத்ததாகவும் மனுவில் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன. இதனால் மன உளைச்சல், மனக்கசப்பு ஆகியவை தீவிரமடைந்ததால் விவாகரத்து கோரியிருப்பதாகத் தெரிகிறது. சில அறிக்கைகளின்படி, இந்த மனு 12 பக்கங்கள் கொண்ட விரிவான ஆவணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது.
இதில் குறிப்பாக பார்க்க வேண்டியது என்னவென்றால், கணவரிடம் இருந்து ஏதேனும் அழுத்தம் வந்தால் நடிகை பெயரை வெளியிடுவேன் என்றும் அனைத்துத் தரப்பின் நலனை கருத்தில் கொண்டு நடிகை பெயரை வெளியிட விரும்பவில்லை என்றும் விஜயின் மனைவி சங்கீதா தரப்பில் கூறப்பட்டுள்ளது. என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிடுவது எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது என்றும் தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அதிர்ச்சி..! தவெக தலைவர் விஜய்- சங்கீதா விவாகரத்து?... கோர்ட்டில் மனு தாக்கல்...!