2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழக (த.வெ.க.) தலைவர் விஜய்யின் சனிக்கிழமை சுற்றுப்பயணங்கள் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சி மற்றும் அரியலூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், செப்டம்பர் 20ஆம் தேதி நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் மக்களை சந்தித்தார். இன்று (செப்டம்பர் 27, 2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்.
நாமக்கல்லில் காலை 8:45 மணிக்கு கே.எஸ்.திரையரங்கம் அருகேயும், கரூரில் மதியம் 3:00 மணிக்கு கரூர்-ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரம் பகுதியிலும் இந்நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கரூரில் ஆரம்பத்தில் இடம் தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டது.
இதையும் படிங்க: நாமக்கல்லே அதிரும் கோஷம்! தவெக தொண்டர்களால் திணறும் சாலை! விஜய்க்கு உற்சாக வரவேற்பு!!
லைட்ஹவுஸ் கார்னர் மற்றும் உழவர் சந்தை பகுதிகளுக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், வேலுச்சாமிபுரத்தில் 11 நிபந்தனைகளுடன் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் 20 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளில், போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பு, சென்டர் மீடியனில் பதாகைகள் இல்லாமை, ரோடு ஷோ தடை உள்ளிட்டவை அடங்கும்.
விஜய்யின் பிரச்சாரங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தாலும், அவரது விமர்சனங்களுக்கு ஆளும் திமுக அரசு தற்போது பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது. அமைச்சர்கள் விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பேசி வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களில் TN Fact Check மற்றும் TVK Fact Check இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.

இன்றைய பிரச்சாரத்தில், கரூரில் “10 ரூபாய் மாஃபியா” மற்றும் நாமக்கல்லில் “கிட்னி திருட்டு” விவகாரங்கள் குறித்து விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் கிட்னி விற்பனை தொடர்பாக விஸ்வரூபம் எடுத்த விவகாரம், இடைத்தரகர்கள் மூலம் ஏழை தொழிலாளர்களின் கிட்னிகள் விற்கப்பட்டது குறித்து வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கரூரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான டாஸ்மாக் 10 ரூபாய் கூடுதல் வசூல் குற்றச்சாட்டுகள் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளன. இவை இன்றைய பிரச்சாரத்தில் முக்கிய தலைப்புகளாக இருக்கும் என சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தமிழக அரசியல் களத்தில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. அவரது பேச்சு மற்றும் மக்கள் ஆதரவு, த.வெ.க.வின் அரசியல் செல்வாக்கை உயர்த்தி வருகிறது.
இதையும் படிங்க: நாகையில் விஜய் பேசுனது கரூரில் எதிரொலிக்குதோ? - அலர்ட் ஆன திமுக... ஆட்டத்தை ஆரம்பித்த தவெக...!