சென்னை, டிசம்பர் 11: நடிகர் விஜய்யின் 30 ஆண்டுக்கால நெருக்கமான மேனேஜரும், முன்னாள் பிஆர்ஓவுமான பி.டி. செல்வகுமார் தற்போது தி.மு.க.,வில் இணைந்துவிட்டார். அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தவெகவையும் விஜய்யையும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
“விஜய் மக்கள் இயக்கத்தை நான்தான் தூணாக நின்று கட்டமைத்தேன். கலப்பை மக்கள் இயக்கத்தை நான் எப்படி ஒழுங்காக நடத்தினேனோ, அதேபோல் விஜய் மக்கள் இயக்கத்தையும் உருவாக்கினேன். ஆனால் காலப்போக்கில் புதிதாக வந்தவர்கள் எல்லாம் விஜய்யின் அப்பாவையே உள்ளே விட முடியாத அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறார்கள்” என்று செல்வகுமார் குற்றம் சாட்டினார்.
“விஜய் நிலவு போன்றவர் – பவுர்ணமியில் பிரகாசிப்பார், அமாவாசையில் மறைந்துவிடுவார். மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வாரா என்பது எனக்கே தெரியவில்லை. அவர் சுற்றி நல்லவர்களும் இருக்கிறார்கள், தீயவர்களும் இருக்கிறார்கள். தீயவர்கள் நல்லவர்களை வெளியே தள்ளிவிட்டு, குப்பைத் தொட்டிகளை ஒன்றாகச் சேர்க்கிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் விஜயின் மக்கள் சந்திப்பு!! அனுமதி பெறுவதில் இழுபறி!! முதல்வரை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்!

பின்னர் பெயர் குறிப்பிட்டு தாக்கிய செல்வகுமார், “பெயர் சொல்ல எனக்கு என்ன பயம்? புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், வெங்கட்ராமன், செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட ஏழு பேர் – இவர்கள் எல்லாம் தியாகிகள் கிடையாது. இவர்கள் விஜய்யின் ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களா? விஜய்க்காக உண்மையாக உழைத்த ரசிகர்கள் யாரும் இன்று தவெகவில் நிர்வாகப் பொறுப்பில் இல்லை” என்று கூறினார்.
“விஜய் மாற்று அரசியல் கொண்டு வருவதாகச் சொன்னார். ஆனால் இன்றைய நிலையில் நான் அவமானப்படுத்தப்பட்டேன். அதனால் தி.மு.க.,வில் சேர்ந்து மக்கள் சேவை செய்ய வந்துள்ளேன்” என்று செல்வகுமார் தெரிவித்தார்.
விஜய்யுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமாக இருந்தவர் இப்படி பகிரங்கமாக விமர்சிப்பது தவெக முகாமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: #2026: நெருங்கும் தேர்தல்... EVM, VVPAT இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்...!