தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026க்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் உருவாக்கிய 'இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள்' என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் 3 முதல் ஜனவரி 2 வரை 234 தொகுதிகளிலும் நடத்தப்பட்ட இந்த கள ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கருத்துக்கணிப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு நேற்று அளித்த பேட்டியில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எந்தக் கட்சியின் ஓட்டுகளை அதிகம் பிரிக்கும் என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் திமுகவின் ஓட்டுகளைப் பிரிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் ஓட்டுகளையும் பிரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜயின் அரசியல் நிலைப்பாடு மோசம் என்று 53 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 2026 அரியணை யாருக்கு?! ட்விஸ்டுகளுடன் வெளியானது லயோலா கருத்துக் கணிப்பு!!
2021 தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா என்ற கேள்விக்கு 47 சதவீதம் பேர் நிறைவேற்றவில்லை என்று கூறியுள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியின் செயல்பாடு நன்றாக உள்ளது என்று 37 சதவீதம் பேரும், சரியில்லை என்று 54 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு மோசம் என்று 39 சதவீதம் பேரும், நன்று என்று 20 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து கே. அண்ணாமலையை மாற்றியது கட்சித் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக 54 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். சிறந்த எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவோர் பட்டியலில் அண்ணாமலை முதலிடத்தையும், அதற்கு அடுத்த இடங்களில் சீமான், விஜய், எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் 2026ல் மீண்டும் முதல்வராக வர வாய்ப்பு உள்ளதாக 55 சதவீதம் பேரும், வாய்ப்பு இல்லை என்று 29 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். முதல்வர் வேட்பாளர் தேர்வில் ஸ்டாலின் முதலிடத்தையும், விஜய் இரண்டாவது இடத்தையும், எடப்பாடி பழனிசாமி மூன்றாவது இடத்தையும், அண்ணாமலை மற்றும் கனிமொழி நான்காவது இடத்தையும், சீமான் மற்றும் உதயநிதி ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தவெக வலுவான கூட்டணி அமைத்தால் அதிமுகவுடன் கடும் போட்டி ஏற்பட்டு இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் திருநாவுக்கரசு தெரிவித்தார். இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தமிழக அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக + காங்., கூட்டணி! வாழ்த்தி வரவேற்போம்!! செங்கோட்டையன் சூசக பதில்!